அலப்பறை செய்யும் ஆளுநர்..! விஷச்சாராய மரணத்தில் விளம்பர வெளிச்சம் தேடும் ஆர்.என் ரவி - முரசொலி கடும் விமர்சனம்
பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் குஜராத்,உத்தரப்பிரதேசம்,மத்தியப் பிரதேசம் போன்ற பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் விஷச் சாராயம் குடித்து பலியானார்களே; அப்போது அங்குள்ள ஆளுநர்கள் இப்படி விஷமத் தனத்தோடு அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டனரா? என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
விஷச்சாரய மரணம்
தமிழகத்தை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் விஷச்சராயம் குடித்து 22 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக திமுகவின் நாளிதழ் விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளது. அதில், அரசியல் தெளிவு, வரலாறுகள் அறியாத ஒருவர் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு அவர் செய்யும் அலப்பறைகள் அளவு கடக்கின்றன! தமிழ்நாட்டில் விஷச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த வேதனையில் அரசியல் நடத்திட சில அரசியல் ஆத்திரக்காரர்கள் முற்பட்டுள்ள நிலையில் நமது ஆளுநர் ரவியும் தன் பங்குக்கு அந்தத் துயரச் சம்பவத்தில் விளம்பர வெளிச்சம் தேட முற்பட்டுள்ளார்! ஆளுநர் விரிவான விளக்க அறிக்கை கேட்பதில் என்ன தவறு?- என்று ஒரு சிலர் கேட்கக்கூடும்! ஆளுநர் கேட்பதில் தவறு இல்லை;
அறிக்கை கேட்ட ஆளுநர் ரவி
கேட்ட விதம்தான். அவர் எத்தகைய விஷமத்தனத்தோடு - விஷம் கக்கியுள்ளார் என்பதை வெளிப்படையாக்குகிறது! நடந்தவை குறித்து முழு விபரங்களை அரசின் மூத்த அதிகாரியை தொலைபேசியிலோ, நேரிலோ அழைத்து அறிந்து கொள்ள ஆளுநரால் முடியும் என்றாலும், அப்படிச் செய்யாது, அதனை ஒரு அறிக்கையாக வெளியிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி, தான் ஏதோ பெரிய செயலைச் செய்து விட்டதாக எண்ணும் சிறுபிள்ளைத்தனம் தான், ஆளுநரின் நெஞ்சம் எல்லாம் எவ்வளவு வஞ்சம் உள்ளது என்பதை உணர்த்துகிறது! இந்தக் கேள்விகளை அரசிடம் எழுப்புமுன் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் குஜராத் (2022), உத்தரப்பிரதேசம் (2019), மத்தியப் பிரதேசம் (2021) போன்ற பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் விஷச் சாராயம் குடித்து பலியானார்களே; அப்போது அங்குள்ள ஆளுநர்கள் இப்படி விஷமத் தனத்தோடு ஆளும் பா.ஜ.க. அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டனரா? என்பதையாவது கேட்டறிந்திருக்க வேண்டாமா?
குஜராத்தில் 2500 பேர் கைது ஏன்.?
ஆளுநர் ரவி ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்டுள்ளார். இது போன்று 2 ஆயிரம் பேரை ஏன் கைது செய்ய வேண்டும் என குஜராத் ஆளுநருக்கு ஒரு தொலைபேசி போட்டு கேட்டிருந்தால் விளக்கி இருப்பார். 2022 ஆம் ஆண்டில் மது விலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் கள்ளசாரயம் சாப்பிட்டு 42 பேர் உயிரிழந்ததாகவும், இதன் தொடர்ச்சியாக 2500 பேரை கைது செய்திருப்பதாக ஏடுகளில் கொட்டை எழுத்துகளில் வந்துள்ளதை ஆளுநர் ரவி அறிந்தேயிருப்பார். ஏனென்றால் அவர் மெத்த தெரிந்த மேதாவி
பாஜக தலைவராக ஆர்என் ரவி செயல்படலாம்
சட்டப் பேரவையை விட்டு கருத்த முகத்தோடு ஓட்டமும் நடையும் என்பார்களே அதுபோல வெளியேறிய நிகழ்ச்சிகளை எல்லாம் அடிக்கடி ஆளுநர் ரவி மறந்து விடுகிறார். ஒருமுறை சூடுபட்ட பூனை கூட மீண்டும் அந்தக் காரியத்தைச் செய்யத் தயங்கும். ஆனால் ரவி. தான் வகிக்கும் பதவிக்குப் பெருமை சேர்க்கும் காரியங்களில் ஈடுபடாது. எப்போதும் சிறு பிள்ளைத்தனத்தோடு செயல்பட்டு கடும் விமர்சனத்திற்கு ஆளாகிறார்! ஆளுநர் ரவி விளம்பர வெளிச்சத்தில் இருக்க நினைத்தால், தனது பதவியைத் துறந்து அண்ணாமலை போல ஏதாவது ஒரு மாநிலத்தின் பி.ஜே.பி. தலைவராக ஆகிவிடலாம். அதைவிடுத்து தாறுமாறாகச் செயல்பட்டு ஆளுநர் பதவிக்குரிய தகுதியைச் சீரழிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருவதை நிறுத்துவது நாட்டுக்கு நல்லது! என முரசொலி தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்