கொரோனா விழிப்புணர்வு என்ற பெயரில் பிரபல  தமிழ் நாளிதழில் வெளிவந்துள்ள கார்ட்டூன், பேரறிஞர் அண்ணா அவர்களை இழிவுபடுத்துவதாக உள்ளதாக கூறி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

திமுகவினர் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1970ம் ஆண்டு முரசொலியில் வெளியான கார்டூனில் 'காமராசரை அரைகுறை உடையோடு பார்வதி தேவியாகவும், கக்கனை அழுக்குப் பிள்ளையாராகவும் சித்தரித்து’ வெளியிடப்பட்டிருந்த படம் இப்போது வெளியாகி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த கார்ட்டூனை முன் வைத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், ’’இந்துமதத்தை மற்றும் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவது தானே இந்து விரோத திக திமுக வேலை. இதுபோன்ற சர்வாதிகார தீய சக்திகள் ஜனநாயகத்திற்கு ஆபத்து. கருத்துப் படங்களை பார்த்து சிரிக்க மற்றும் சிந்திக்க வேண்டும்.

 

ஆனால், தினத்தந்தியில் மதி அவர்களின் கருத்துப் படத்திற்கு ஸ்டாலின் கடுமையான வார்த்தைகளால் விமரிசித்ததோடு திமுகவினர் மதி அவர்களை தொலைபேசியில் மிரட்டுவதும் ஆபாச வார்த்தைகளை பயன் படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது’’எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். 1970ல் காமராஜரை கார்ட்டூன் போட்டு இழிவு படுத்தியது மட்டும் நியாயமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.