பி.ஜே.பி.யின் தேசிய செயலர்களில் முக்கியமானவர் முரளிதர் ராவ். ஆந்திரகாரரான இவருக்கு நாடு முழுமையிலும் உள்ள மாநிலங்களுக்கு சென்று கட்சியை வளர்க்கும் உரிமை இருந்தாலும் கூட மனிதர் ஏகத்துக்கும் விரும்புவது தமிழகத்தினுள் வலம் வருவதற்குதான். காரணம், மற்ற மாநிலங்களை விட  தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் ராவிடம் அநியாயத்துக்கு மரியாதை காட்டுவதுதான்.  

இதற்கு முன் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் ராவ் வளைய வந்திருந்தாலும் கூட எதிர் கட்சியின் தலைவனான தி.மு.க.வை பற்றி பெரிதாக விமர்சனம் செய்ய மாட்டார். ஏதோ போகிற போக்கில் லேசாக தட்டிவிட்டு, திட்டிவிட்டு நகர்ந்துவிடுவார். ஆனால் இந்த தேர்தலில் துவக்கத்தில் இருந்தே தி.மு.க.வை வறுத்தெடுத்தார் ராவ். 
சரி, ஏதோ பிரசாரத்துக்கு வந்த இடத்தில் பேசிட்டு போகட்டும்! என்று தி.மு.க.வினரும் பெரிதாய் கண்டுக்காமல் விட்டனர். 

ஆனால் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்துவிட்ட பின்னரும் கூட ராவ் அடங்கவில்லை. சமீபத்தில்  “ஸ்டாலினுக்கு தேர்தலை எதிர்கொள்ளவே பயமாக இருக்கிறது போல. அதனால்தான் ’மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே நாங்கள் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவோம்.’ என்று பேசுகிறார். பைபாஸில் ஆட்சிக்கு வர ஆசைப்படுறார் ஸ்டாலின். ஆக அவருக்கு தைரியமாக தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிக்க முயலும் தைரியம் இல்லைதானே!” என்று போட்டுச் சாத்திவிட்டார். 

இதில் டென்ஷனின் உச்சத்துக்கு போன ஸ்டாலின் தரப்போ “பைபாஸ்ல ஆட்சியை பிடிக்கணும்னு எங்க தளபதி நினைச்சிருந்தால், ஜெயலலிதா இறந்த மறுநாளே ஆட்சியை கலைச்சிருப்பார். ஆனால் புழக்கடை வழியா ஆட்சிக்கு வர ஆசைப்படாதவர் அவர். அதனாலதான் பொறுமையா காத்திருந்து நம்பிக்கை வாக்கெடுப்பு, இடைத்தேர்தல்கள்-ன்னு  சட்டப்படி ஆட்சியை பிடிக்க முயற்சி செய்றார். பைபாஸில் ஆட்சியை காப்பாத்திக்க உங்க காலில் விழுந்து கிடக்குற அ.தி.மு.க. டீமிடம் கேளுங்க ‘நேர்மைன்னா என்னான்னு தெரியுமா?’ன்னு. அதனால மிஸ்டர் ராவ்! தமிழ்நாடுக்கு வந்தோமா, இட்லி சட்னி சாப்பிட்டோமா, கிளம்பினோமான்னு இருக்கணும்.” என்று பதிலுக்கு வெளுத்திருக்கின்றனர். 
நச்சுன்னு இருக்குதுல்ல!