மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் மிக மோசமாக தாக்கி வரும் நிலையில்,  மும்பையில் நிலமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக அங்கு தன்னார்வ சுகாதார சேவையாற்றி வரும் கேரள சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. மும்பையில் மட்டும் தினமும் ஆயிரக்கணக்கான நபர்கள் புதிய வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது, தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்கள் காலியாக உள்ள மருத்துவமனைகளை நோக்கி விரைகின்றன, சரியான கவனிப்பு இல்லாமல் பலர் ஆம்புலன்சிலேயே இறக்கின்றனர், கொள்ளை நோய்க்கு  எந்தவித உதவியும் கிடைக்காத நிலையில் மும்பை வாசிகள் உள்ளதாக, கேரளாவில் இருந்து மருத்துவ சேவையாற்றச்சென்ற திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி துணை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.எஸ் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், நோயை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது என்ற நிலை உருவாகியுள்ளது, குறிப்பாக மும்பையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது, இதற்கிடையில் அங்கு மேன்மேலும் சுகாதார ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டதன் விளைவாக பல மருத்துவமனைகள் மருத்துவச் சேவையை வழங்க முடியாமல் ஸ்தம்பித்து வருகின்றன, இந்நிலையில் மக்கள் உயிர் பிழைப்பதற்கான இடம் தேடி அலைவதால் வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கேரளாவைப் போன்று பயனுள்ள கட்டுப்பாடுகள் எதையும் ஏற்படுத்த முடியவில்லை, நோய்த் தொற்றின் ஆதாரம் கண்டுபிடிக்கமுடியவில்லை. கொரோனா சிகிச்சைக்காக புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனைகளின் சில நொடிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது,  ரேஸ் கோர்ஸில் கோவிட் மருத்துவமனையை தொடங்க மும்பை மாநகராட்சி முடிவு செய்தது ஆனால் அது சூறாவளி அச்சுறுத்தலால் மாற்றப்பட்டது, சுமார் 1500 படுக்கைகள் கொண்ட செவன் ஹில்ஸ் என்கிற பிரமாண்ட தனியார்  மருத்துவமனையை அரசு கையகப்படுத்தியுள்ளது. 

அதற்குள் அங்கு 700 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு விட்டனர், 20 ஐசியு படுக்கைகள் மட்டுமே அங்குள்ளது, இந்நிலையில் கேரளத்தில் இருந்து சென்ற 18 பேர் கொண்ட மருத்துவ குழு செவ்வாய் அன்று 20 கூடுதல் ஐசியு படுகைகளை தயார் செய்துள்ளது, மேலும் 200 ஐசியு படுக்கைகள் தயாராக்கும் பொறுப்பு இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 200 படுக்கைகள் கொண்ட ஐசியு செயல்பட,  45 செவிலியர்கள் உட்பட 70 சுகாதார ஊழியர்கள் தேவை என கேரள மருத்துவ குழு தெரிவிக்கிறது. மும்பைக்கு சேவையாற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுகாதார ஊழியர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், அதில்  பெரும்பாலானோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது என சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.