நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து  87 ஆயிரத்து 115-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8107ஆக அதிகரித்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டக்கூடும் என அஞ்சப்படுகிறது. மற்றொரு புறம் மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இந்தியாவின் கொரோனா மையமாகவே மும்பை மாறியுள்ளது.  நாட்டின் பொருளாதார தலைநகமான மும்பை கொரோனா தொற்றில் சீனாவின் வுஹான் நகரத்தையே மிஞ்சியுள்ளது. மும்பையில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 ஆயிரத்து 996  பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் கொத்துக்கொத்தாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகிவருவதால், நகரத்தில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. போதிய படுக்கை வசதி இல்லாததால் கொரோனா பாதித்தவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் மருத்துவமனையின் சவக்கிடங்கில் சடலங்களை வைக்க இடமில்லாதநிலை ஏற்பட்டுள்ளது, இறந்தவர்களின் உறவினர்கள் உடல்களை பெற்றுச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். மும்பை புறநகர் பகுதியான பரேலில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் (கேஇஎம்) மருத்துவமனையில் அடையாளம் தெரியாத 12 சடலங்கள் தகனம் செய்ய கடந்த 3 வாரங்களாக காத்திருக்கின்றன. குடும்ப உறுப்பினர்களால் கூட அந்த உடல்களை அடையாளம் காண முடியவில்லை. தங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்ற அச்சம் காரணமாக பலஉறவினர்கள் சடலங்களை பெற முன்வர மறுக்கின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 42 வயதான சுதிர் ரூப்சந்தின் குடும்பத்தினர் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் சுதீர் ரூப்சந்த் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார், அவரது உடல் கேஇஎம் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது ஆறு வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவரது மனைவியும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளநிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.  அதாவது கடந்த 20ஆம் தேதி அன்று சுதீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார், உள்ளூர் மருத்துவரை பார்த்த பிறகு அவரது உடல் நிலை மோசமடைந்தது, சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இந்நிலையில் அவரது மனைவி கொரோனா வைரஸ் தனது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டு விட்டது என வேதனை தெரிவித்துள்ளார்.  மனைவி பீமாவின் அனுமதியுடன் மருத்துவமனை நிர்வாகம் சுதிர்  ரூப்சந்த் உடலை அடக்கம் செய்ய உள்ளது. மேலும், மீதமுள்ள சடலங்களையும் அடக்கம்  செய்யமுடியாத நெருக்கடி நிலைக்கு மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் ஆளாகி உள்ளது. அந்த மருத்துவமனையில் வெறும் 36 உடல்களை மட்டுமே பாதுகாப்பாக வைக்க முடியும் என்ற நிலையில் மேலும் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனை நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. மேலும் மும்பையில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உயிரிழப்புகள் காரணமாக பல மருத்துவமனைகள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இறந்த 30 நிமிடத்திற்குள் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும்,  அடையாளம் காணப்பட்டாத உடல்களை 48 மணிநேரம் கண்காணிப்பில் வைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.