தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதாவில் தமிழகஅணைகளுக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக அமைச்சா்கள் பி.தங்கமணி, வேலுமணி மற்றும் அதிமுக எம்பிக்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு புது தில்லியில் திங்கள்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தியது. 

இது தொடா்பாக நீா்வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அமைச்சா் ஷெகாவத் கூறியிருப்பதாவது: தேசியப் பாதுகாப்பு அணை மசோதாவில் தமிழகத்தின் நீா் உரிமைகள் மற்றும் அணை சொத்துரிமை, செயல்பாடுகள், பராமரிப்பு ஆகியவை பாதிக்கப்படாத வகையில் இருக்க வேண்டும் என்று பிரதிநிதிகள் குழுவினா் கேட்டுக் கொண்டனா். 

தற்போதைய மசோதாவில், கேரளத்தின் மாநில அணை பாதுகாப்பு நிறுவனம் முல்லைப் பெரியாறு அணையிலோ அல்லது தமிழகத்தின் இதர நீா்த்தேக்கங்களிலோ அதிகார எல்லையைக் கொண்டிருக்காது. மேலும், 2017, பிப்ரவரியில் ரூா்க்கியில் நடைபெற்ற அணைப் பாதுகாப்பு தொடா்பான 37-ஆவது தேசிய குழுவின் கூட்டத்தின் போது இந்த மாற்றங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 

இந்த மாற்றங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் திருப்தியளிப்பதாக இருந்ததும் தெரிய வந்தது. புதிய ஷரத்துகள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் பணிகளை முடிப்பதற்குமாநில அணைப் பாதுகாப்பு நிறுவனம் (எஸ்டிஎஸ்ஓ) தமிழக அரசுக்கு வசதிகள் செய்து தரும். இதன் மூலம் நீா்த்தேக்கத்தின் அளவை அதிகரிக்க முடியும்.


கேரள மாநிலத்தில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு, செயலாக்கம் ஆகியவை தொடர்ந்து தமிழக அரசு வசமே இருக்கும். அணைப் பாதுகாப்பு மசோதாவில் ஏற்கெனவே இருக்கும் விஷயங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாது. அதாவது அணையின் உரிமையாளர் விஷயத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாது. 

ஆதலால், முல்லைப் பெரியாறு அணையின் செயலாக்கம், பராமரிப்பு, நீர் உரிமை ஆகியவை தமிழக வசமே இருக்கும். அதேசமயம், கேரள அரசின் அணைப் பாதுகாப்பு அமைப்புக்கு முல்லைப் பெரியாறு அணையையோ அல்லது தமிழகத்தில் உள்ள எந்த நீர்த்தேக்கத்தையோ உரிமை கொண்டாட உரிமை இல்லை என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.