இசை என்கிற ராஜேஸ்வரி கொடுத்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்காக முகிலனை அடுத்த 24 மணி நேரத்திற்குள் கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டுமென்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

142 நாட்களுக்குப் பின்னர் ஆந்திராவில் திடீரென காட்சி அளித்த  முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஆந்திர போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையேற்று, காட்பாடி ரெயில்வே காவல் நிலையத்திற்கு முகிலன் கொண்டு வரப்பட்டார். பின்னர் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் காட்பாடி சென்றனர். அங்கிருந்த ஆந்திர போலீசார், முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர்கள் முகிலனை பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இரவில் நெஞ்சுவலி என கூறியதால் முகிலனை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வந்தனர். 

இந்நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முகிலனை சிபிசிஐடி போலீசார் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கரூர் பெண் அளித்த பாலியல் புகார் தொடர்பாக நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையின் முடிவில், 24 மணி நேரத்திற்குள் கரூர் நீதிமன்றத்தில் முகிலனை ஆஜர்படுத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அவரை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். உடல்நலம் மிகவும் குன்றியுள்ள விசாரணை என்ற பெயரில் போலீஸார் தொடர்ந்து அலைக்கழித்து வருவதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்துவருகின்றன.