உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தற்போது இந்தியாவிலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறை மிகக் கடுமையாக பின்பற்றி பின்பற்றப்பட்டு வருகிறது.

மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசு மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனிடையே பல்வேறு தன்னார்வலர்களும் மக்களுக்கான உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் MRV டிரஸ்ட் தற்போது ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஆர்டரின் பேரில் வீடு தேடி சென்று இலவசமாக டோர் டெலிவரி செய்யும் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளனர். 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே சென்றால் சமூக விலகலை கடை பிடிக்க இயலாமல் போகும் என்பதால் கரூர்  மாவட்டத்தில் MRV டிரஸ்ட் சார்பாக கரூர் நகராட்சி பகுதிகளில் மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகளை ஆர்டரின் பேரில் இலவச டோர் டெலிவரி செய்து வருகின்றனர்.

காலை 8 மணி முதல் மதியம் 1 வரை செய்யப்பட்டு வரும் இந்த சேவையானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கரூர் நகராட்சி பகுதியில் இருக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்காக கடைகளுக்கு செல்லாமல் MRV டிரஸ்ட் தன்னார்வலர்கள் மூலமாக பயன்பெற்று வருகின்றனர்.