சட்டமன்ற தேர்தல் கூட்டணி விவகாரத்தில் இரண்டு விதமான வியூகங்களை தேமுதிக வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை கிங் மேக்கராக வலம் வந்தவர் விஜயகாந்த். 2016ம் ஆண்டும் தேமுதிகவுடன் கூட்டணி சேர திமுக மிகவும் விரும்பியது. ஆனால் அப்போது மக்கள் நலக்கூட்டணி என விஜயகாந்த் எடுத்த முடிவால் தேமுதிக தற்போது இருந்த இடம் தெரியாமல் போன ஒரு கட்சியாகிவிட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெறும் 4 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு நான்கிலுமே படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் கூட தேமுதிகவிற்கு என்று 5 சதவீத வாக்கு வங்கி இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

இந்த 5 சதவீத வாக்கு வங்கி என்பது சட்டமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பீகாரை போல தமிழகத்திலும் ஆளும் மற்றும் எதிர்கட்சி கூட்டணி வேட்பாளர்களுக்கு இடையிலான வெற்றி வித்தியாசம் மிக மிக குறைவாக இருக்கும் சூழல் ஏற்பட்டால் தேமுதிகவின் 5 சதவீத வாக்கு வங்கி வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடும். எனவே தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒருபக்கம் திமுக முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இதே போல் தமிழகத்தில் திமுக – அதிமுகவிற்கு மாற்றாக 3வது அணி அமைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த 3வது அணியில் தேமுதிகவை சேர்க்கவும் வழக்கம் போல் முன்னெடுப்புகள் உள்ளன. அதே போல் தற்போதைய கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவும் கூட தேமுதிகவை சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளும் கணக்கு போட்டு வைத்துள்ளது. இப்படி தேமுதிகவிற்கான தேவை கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் குறைந்திருந்தாலும் இல்லாமல் இல்லை. எனவே இதனை பயன்படுத்தி தேர்தல் வியூகத்தை வகுக்கும் பணியில் பிரேமலதா ஈடுபட்டுள்ளார்.

வழக்கம் போல் அதிக தொகுதிகளை கேட்டுப் பெறுவது தேர்தலுக்கு பிறகு ஆட்சியில் பங்கு என்பது தான் தேமுதிகவின் முதல் வியுகம் என்கிறார்கள். கடந்த தேர்தலின் போது திமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஆட்சியில் பங்கு என்று தேமுதிக முன்வைத்த நிபந்தனையை ஸ்டாலின் ஏற்கவில்லை. இதன்பிறகே கூட்டணி பேச்சு முறிந்து தேமுதிக மக்கள் நலக்கூட்டணிக்க சென்றது. இதே போன்று தற்போதும் அதிமுக மற்றும் திமுகவுடனான பேச்சுவார்த்தையின் போது ஆட்சியில் பங்கு என்பதைத்தான் பிரதானப்படுத்த தேமுதிக முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

இதற்கு அடுத்தபடியாக மாநிலங்களை எம்பி சீட் என்பதிலும் தேமுதிக இந்த முறை கறார் காட்டும் என்கிறார்கள். ஒரு வேலை எதிர்பார்க்கும் சட்டமன்ற தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் ஒரு ராஜ்யசபா சீட்டுக்கான உறுதிமொழியை தொகுதிப் பங்கிட்டின் போதே கேட்டுப் பெற தேமுதிக தயாராகி வருகிறது. இது தவிர பாஜகவுடன் தேமுதிக எப்போதுமே நெருக்கமாக இருந்து வருகிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தான் பாமக இருக்கும் கூட்டணிக்கு ஓகே சொன்னார் விஜயகாந்த். இதே போல் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கும் பாஜக கேட்டுக் கொண்டதால் தான் அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக.

தமிழகத்தில் பாஜகவின் நம்பிக்கைக்கு உரிய கட்சியாக தேமுதிக திகழ்ந்து வருகிறது. எனவே இந்த முறை கூட்டணி விஷயத்தில் பாஜக ஏதேனும் வேண்டுகோளை தேமுதிக தரப்பிடம் முன்வைத்தால் மத்திய அமைச்சர் பதவியை கேட்டுப் பெற வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.. அதிமுக கூட்டணியில் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக அதிமுக தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும் பிறகு பாஜக மத்திய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது அந்த வியூகம் என்கிறார்கள்.

இந்த வியூகம் தான் கடந்த இரண்டை காட்டிலும் தேமுதிக அதிகம் விரும்புவது என்கிறார்கள். ஏனென்றால் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோற்றாலும் கூட ராஜ்யசபா சீட் கிடைத்துவிடும். இதே போல் மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளதால் மத்திய அமைச்சரவை பதவியும் உறுதியாகிவிடும். எனவே இந்த வியூகங்களின் அடிப்படையில் தான் தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தை இருக்கும் என்பது கோயம்பேடு கட்சி வட்டார தகவல்கள்.