கிரிக்கொட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியபோது பெற்ற முழு சம்பளத்தையும் பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கடந்த 2012-ம் ஆண்டு மாநிலங்களவையில் கவுரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் முறையாக நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆனாலும் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து சுமார் 7.4 கோடி ரூபாய் செலவு செய்து, 20 பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தினார்.  மேலும், ஆந்திராவில் உள்ள புத்தம் ராஜூ கந்திரிகா மற்றும் மராட்டிய மாநிலத்தில் உள்ள டோஞ்சா கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார்.

இந்தநிலையில், தெண்டுல்கர் தனது பதவிக்காலம் முடிந்ததையடுத்து அவருக்கு சம்பளம் மற்றும் இதர உதவித்தொகைகள் சேர்த்து சுமார் 90 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்த பணத்தை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்.

சச்சின் தெண்டுல்கர் இந்த செயலுக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். இந்த நிதி பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.