எம்.பி தேர்தலில் தங்களுடன் தான் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க நெருக்கடி கொடுத்து வருவதால் செய்வதறியாது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திணறி வருகிறார்.  அண்மையில் சென்னை வந்து சென்ற அமித் ஷா பொதுக்கூட்டத்தில் பேசிய போது தமிழகத்தில் இருந்து ஊழல் அகற்றப்பட வேண்டும் என்று பேசியிருந்தார். அ.தி.மு.கவிற்கு நெருக்கமான கட்சியாக பா.ஜ.க. இருந்து வரும் நிலையில் அமித் ஷா தமிழகத்தில் ஊழல் அகற்றப்பட வேண்டும் என்று பேசியதன் மூலம் அ.தி.மு.க.விற்கு எதிராக பேசிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டது.   ஆனால் மறுநாளே செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், அமித் ஷா ஊழல் என்று பொத்தாம் பொதுவாகவே பேசியதாகவும், அ.தி.மு.க. அரசை அமித் ஷா விமர்சிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்து அதிர்ச்சி அளித்தார். இதற்கு ஒரு படி மேலே போய், அ.தி.மு.க. அரசை அமித் ஷா விமர்சிக்கவே இல்லை என்றும் மொழி பெயர்ப்பில் சிறு தவறு நிகழ்ந்துவிட்டதாகவும் கூறி செய்தியாளர்களை வாய் பிளக்க வைத்தார் பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வலுவான கூட்டணி அமைத்தே போட்டியிடும் என்று தமிழிசை மற்றும் இல.கணேசன் கூறினர். அமித் ஷா பேசிவிட்டு சென்ற பிறகு அவரது பேச்சுக்கு கண் காது மூக்கு வைத்து பலரும் பேசி வந்த நிலையில், அதெல்லாம் இல்லை நாங்கள் அ.தி.மு.க.வுடன் சுமூகமாகவே இருக்கிறோம் என்கிற ரீதியில் தமிழிசை மற்றும் இல.கணேசன் பேசியிருந்தனர். இதற்கு காரணம் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை விட்டால் கூட்டணிக்கு வேறு கட்சி இல்லை என்பதை பா.ஜ.க. உணர்ந்திருப்பது தான் என்று சொல்லப்படுகிறது. மேலும் அமித் ஷா சென்னை வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் சந்தித்து பேசியிருந்தார். அப்போதே பா.ஜ.க.வுடன் கூட்டணியை அ.தி.மு.க. உறுதிப்படுத்த வேண்டும் என்று பொன்னார் கூறியதாகவும் அதற்கு எடப்பாடி பழனிசாமி சிறிது அவகாசம் கேட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்தி தங்களுக்கான தோராயமான தொகுதிகளை ஒதுக்கும்படி பா.ஜ.க. மேலிடம் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்சை நெருக்கி வருவதாக சொல்லப்படுகிறது.பா.ஜ.க.வின் நெருக்கடிக்கு ஓ.பி.எஸ் பணிந்துவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி மட்டுமே பிடி கொடுக்காமல் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் மூத்த அமைச்சர்கள் சிலர் கூட்டணி விவகாரத்தில் அவசரம் வேண்டாம் என்று எடப்பாடியை எச்சரித்ததே காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் தான் வருமான வரித்துறையை ஏவிவிட்டு அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வேலையில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.