நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட டி.டி.வி தினகரன் முடிவு செய்துள்ளதாக ஏசியா நெட் இணையதளத்தில் வெளியான செய்தியை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை, நிர்வாகிகளை சந்தித்து வரும் டி.டி.வி தினகரன் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும், பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் ஏசியா நெட் இணையதளத்தில் நேற்று காலை செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 25 தொகுதிகளில் டி.டி.வி தினகரன் வேட்பாளர்களை நிறுத்திவிட்டு எஞ்சிய 15 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க தினகரன் முடிவெடுத்துள்ளதாகவும் ஏசியா நெட் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர்களை நிறுத்தும் என்பதை உறுதிப்படுத்தினார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் என்ன என்று தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தினகரன், 15 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க முடிவெடுத்துள்ளதாக கூறினார். மேலும் 25 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த அ.ம.மு.க. முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றது போல் அ.ம.மு.க. கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்றும் தினகரன் கூறினார். காலையில் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் டி.டி.வி தினகரனின் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்த செய்தியில் கூறியிருந்தை அப்படியே தினகரன் தனது செய்தியாளர் சந்திப்பின் போது உறுதிப்படுத்திவிட்டு சென்றார்.