புதுக்கோட்டை மாவட்டத்தின் மூத்த அதிமுக நிர்வாகி ரத்தினசபாபதி. இவர் ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றினார். பின்னர்  அதிமுகவில் இணைந்து பணியாற்றினார். எம்.ஜி.ஆர் இருந்தபோது மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்த திருநாவுக்கரசரின் நெருங்கிய நண்பரான கோபாலபுரம் நல்லகூத்தன், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பொருளாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 

எம்ஜிஆர் மறைவுக்கு பின் 1989ம் ஆண்டு அதிமுக உடைந்து மீண்டும் இணைந்தவுடன், ஜெயலலிதா திருநாவுக்கரசருக்கு செக் வைக்கும் நோக்கத்துடன்,  புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பொருளாளராக ரத்தினசபாபதியை நியமித்தார். அதன்பிறகு தீவிர அரசியலில் இறங்கிய ரத்தினசபாபதி, குறுகிய காலத்திலேயே ஜெயலலிதா மற்றும் சசிகலாவிடம் நற்பெயர் பெற்று நெருக்கமானவராக இடம்பெற்றார். 

இந்த நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரத்தினசபாபதிக்கு ஜெயலலிதாவால் நேரடியாக சீட் ஒதுக்கப்பட்டு, அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இரு அணிகளான அதிமுகவை  இணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அந்த முயற்சி பலிக்காததால் ரத்தினசபாபதி டிடிவி ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.செந்தில்பாலாஜி உள்ளிட் 21 எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அறந்தாங்கி எம்.எல்.ஏ  ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. கட்சி தலைமையும்  நடவடிக்கை எடுக்கவில்லை.

 

அதன் பின்னர் ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.  அமமுக மாநில அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் காரைக்குடியில் பொதுக்கூட்டத்தில் பேசிய ரத்தினசபாபதி, ’என் மீது நடவடிக்கை எடுக்கும் உத்தரவில் சபாநாயகர் கையெழுத்து போட்டால்  கையை வெட்டுவேன். சபாநாயகர் தனபால் மற்றும் கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோருக்கு அதுதான் கடைசி கையெழுத்தாக இருக்கும் எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இதுகுறித்து வழக்கப்புபதிவு செய்யப்பட்டு முன் ஜாமின் பெற்றார் ரத்தினசபாபதி. இப்போது அவரை எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். இப்போது ரத்தினசபாபதி கையை வெட்டப்போவதாக பேசியதை மறந்திருப்பாரா..? அல்லது என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்ப்பு எழுந்துள்ளது.