ஐஐடியில் சமூகநீதிபாதுகாக்கப்படவேண்டும் என மஜக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம்: இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களை தரப்படுத்தும் நோக்கோடு அமைக்கப்பட்ட ராம் கோபால் ராவ் தலைமையிலான குழு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு முறை இனி ஐஐடி களுக்கு தேவையில்லை என பரிந்துரைத்துள்ளது. 

மேலும் பேராசிரியர் பணியிடங்களுக்கும் இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் பரிந்துரைத்துள்ளது.இது பரிந்துரையா? அல்லது வலதுசாரி குழு ஒன்றின் சதியா? என்பதை நாட்டு மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். இந்நாட்டில் உள்ள 97% மக்களின் வரிப்பணத்தில்  இயங்கும் உயர் கல்வி நிறுவனங்களில்  அம்மக்கள் நயவஞ்சகமாக ஒதுக்கப்படுவது சமூக அநீதியாகும். உயர் கல்வி நிறுவனங்களா? உயர் சாதி மையங்களா? என்ற கேள்வி எழும் முன்பு அங்கே அனைவருக்குமான  சமூக நீதியை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை  வேண்டும். 

இந்த உயர் கல்வி கூடங்களில் 97% இருக்கக் கூடிய சமூகங்களை சேர்ந்தவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றும், அதனால் பல தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும் , அவை  மர்ம தேசங்களாக இருக்கின்றன என்றும் கருத்துகள் நிலவும் நிலையில், அங்கே சமூகநீதியும், ஜனநாயகமும் நிலைநாட்டப்பட அனைவரும்  குரல் கொடுக்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டுள்ளது.