இந்தியாவில் இருந்து அதிக முறை  வெளிநாடுகளுக்குச் சென்று சாதனை படைத்தவர் என்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு பரிந்துரைத்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்  பாஜக அரசு வெற்றி பெற்று நரேந்தி மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். மோடி பிரதமரான பின் கடந்த  4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்து 52 நாடுகளை சுற்றியுள்ளார்.

பிரதமர் மோடி இது வரை  வெளிநாடு சென்று வந்த வகையில் ஆன செலவு ரூ.355 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மோடியை நெட்சன்கள் செமையாக கலாய்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ்  செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர், தனது கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை செய்தியாளர்களுக்கு காண்பித்தார். அதில் அதிகமுறை வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு அவரது பெயரை பரிந்துரைத்து காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது என தெரிவித்தார்.

பிரதமர் மோடி அதிக நாடுகளுக்கு சென்றவர் என்பதை வலியுறுத்தும் விதமாக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும். இதற்காக கின்னஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார். இதற்கு பாஜக  விரைவில் பதிலடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.