ஆளுநர் சர்ச்சை பேச்சை கண்டித்து போராட்டம்… 75க்கும் மேற்பட்டோர் கைது!!
ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறளை அவமதித்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 75க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறளை அவமதித்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 75க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசுகையில், திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் ஒரு விடிவெள்ளி. திருக்குறள் பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது. தமிழக ஆளுநராக நான் பதவியேற்ற பிறகு, எனக்கு திருக்குறள் புத்தகமே அதிக அளவில் பரிசாக கிடைத்தது. திருவள்ளுவரை பொறுத்தவரை உள் ஒளி மிக்க ஆன்மிகவாதி. திருக்குறளின் முதல் குறளில் ஆதிபகவன் என்று திருவள்ளுவர் எழுதி இருக்கிறார். ஆதி பகவன் தான் இந்த உலகத்தை படைத்தார். அதைத்தான் திருவள்ளுவர் கூறுகின்றார். ஆனால் திருக்குறளை மொழி பெயர்த்த ஜி.யூ.போப் திருக்குறளில் உள்ள ஆன்மிக சிந்தனைகளை நீக்கிவிட்டார். மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யூ.போப் தந்திருக்கும் திருக்குறளின் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல இருக்கிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் இணையும் அன்வர் ராஜா.. யார் அணியில் இணையப்போகிறார் தெரியுமா ? எடப்பாடியா? பன்னீரா?
திருக்குறளில் பக்தி ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளது. ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் இருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டது. ஆதி பகவன் என்பதை மொழிபெயர்ப்புகளில் தவிர்த்துள்ளனர். பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பைவிடுத்து உண்மையை வெளிக்கொணர வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்தியாவை கலாசார இல்லாத நாடாக, ஒரு பொருளாக, சந்தையாக காட்ட முயன்றனர். இந்தியா, கலாசாரம் நிறைந்த பண்பட்ட சமூகமாக அப்போதே இருந்தது. கனடாவில் பிறந்து கிறிஸ்தவ மிஷனரியாக இந்தியா வந்து 40 ஆண்டுகாலம் தமிழுக்கு சேவை செய்த பெருமைக்கு உரிய ஜி.யு.போப். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தமிழ் இலக்கியத்தின் மேன்மையை உலக அரங்குக்கு கொண்டு சென்றவர் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடிய ஸ்டாலினே மதிப்பதில்லை... மக்கள் எப்படி மதிப்பாங்க? ஆர்பி உதயகுமார் கேள்வி!!
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறளை அவமதித்ததாக கூறி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருக்குறளை அவமதித்த ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ் அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு முதுபெரும் அரசியல் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழ. கருப்பையா எம்.ஜி.கே. நிஜாமுதீன், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பழநெடுமாறன், பழ. கருப்பையா உள்ளிட்ட 75 பேரை கைது செய்தனர்.