Modi wrote poem about Sun in his book
எஸ்கார்ட் போலீஸ் பாதுகாப்புடன், வெள்ளையும் சொள்ளையுமாக செம கெத்தாக வெளியில் திரிந்தாலுங்கூட உள்ளுக்குள் வெடவெடத்துத்தான் கிடக்கிறது தமிழக அமைச்சரவை. அமைச்சர்கள் மட்டுமில்லை! முதல்வர், துணை முதல்வர் என ஒட்டுமொத்த டீமும் ஒரு மார்கமாகத்தான் இருக்கிறது. கழுத்துக்கு மேல் தொங்கும் கத்தியாகவே பி.ஜே.பி.யை பார்த்து பம்முகிறார்கள்.
ஏற்கனவே கருணாநிதியை மோடி வீடு தேடி சென்று சந்தித்த பின் ’தேவைப்பட்டால் தி.மு.க.வோடும் கூட்டணி வைப்போம்.’ என்று பி.ஜே.பி. நமக்கு சொல்லாமல் சொல்லி இருக்கிறது. ‘அலட்டா இருடா ஆறுமுகம். நம்மை சுத்தி சுத்தி சூழல் அப்படியொண்ணும் சுகந்தமா இல்ல’ என்று நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை மேலும் நடுங்க வைக்கும் விதமாக தி.மு.க. எம்.எல்.ஏ.வும், மாஜி அமைச்சருமான பொன்முடி ‘தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமையாது என்று சொல்லிவிட முடியாது.’ என தன் பங்குக்கு கொளுத்திப் போட்டிருக்கிறார்.
இதனால் பி.ஜே.பி. - தி.மு.க. என இரண்டு வார்த்தைகளையும் சேர்த்துக் கேட்டாலே குலை நடுங்குகிறார்கள் தமிழக அமைச்சர்கள்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தி மொழியில் எழுதியிருக்கும் கவிதைப்புத்தகம் ஒன்று ‘சிந்தனைக் களஞ்சியம்’ எனும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்ப்பாகி இருக்கிறது. அதில் ‘சூரியன்’ பற்றி தனி கவிதை எழுதியிருக்கிறார் மோடி. அதிலுள்ள வார்த்தைகள் தமிழக அமைச்சர்களை கிலி பிடிக்க வைத்துள்ளன. அதுமட்டுமில்லாமல், அந்த நூலின் வெளியீட்டு விழாவில், கருணாநிதியின் அரசவை புலவராக விமர்சிக்கப்படும் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டது அமைச்சர்களுக்கு அல்லு தெறிக்க வைத்துள்ளது.

சூரியன் பற்றி நமோ எழுதியிருக்கும் கவிதையின் ஹைலைட் வரிகள் இதுதான்...
“இந்தச் சூரியனை எனக்கு பிடித்திருக்கிறது
தனது ஏழு குதிரைகளின் கடிவாளங்களையுமே
தன் கைப்பிடியில் வைத்துள்ளான்.
ஆனால், இவற்றில் எந்தக் குதிரையையும்
சாட்டையால் அடித்ததாக அறியவில்லையே.
இருந்திடினும்
சூரியனின் மதி
சூரியனின் நடை
சூரியனின் திசை
எல்லாமே பொருந்தி இருக்கிறதே!
அன்பு ஒன்றினாலேயே அது.”
- என்று சூரியனிடம் லயித்துப் போயி எழுதியிருக்கிறார் மோடி.
இந்த கவிதையை வாசித்துவிட்டு, ‘இந்த வரிகள் முழுக்க எங்கள் தலைவர் கலைஞரின் திறனைப் பார்த்து வியந்து மோடி எழுதியவைதான்.’ என்று சிலிர்த்து, சிலாகித்து கண்ணடிக்கிறார்கள்.
ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருக்கும் தமிழக அமைச்சர்களுக்கு இந்த கவிதையால் காய்ச்சலே வந்துவிட்டது. ஆனாலும் “காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என்று தங்களின் ஒட்டுமொத்த எதிரிகளும் இப்போது தி.மு.க.விடம்தான் தஞ்சம் புகுந்து கிடக்கின்றன. எனவே எக்காலத்திலும் பி.ஜே.பி. தி.மு.க.வுடன் கூட்டு சேராது.” என்று தங்களுக்கு தாங்களே ஆறுதல் சொல்லியிருக்கின்றனர்.
ஒரு கவிதையை பார்த்துட்டு இத்தனை களேபரமா!
