நாடு முழுவதும் மக்களவைக்கு 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் வரும் 19 ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி  மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில், ரட்லம் மற்றும்  இந்துார்  மக்களவைத் தொகுதிகளிலும், ஹிமாச்சலப் பிரதேசத்திலும், மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியல் மேதாவிகளும், டெல்லியில் கட்டுக் கதைகளை பரப்புவோரும், இந்த தேர்தலில் மோடி அலை வீசவில்லை என, முதலில் கூறினர். 

தற்போது, ஓட்டு சதவீதம் அதிகரித்ததும் அவர்கள் கவலை அடைந்து உள்ளனர். அவர்களுக்கு, சாதனைகளை உருவாக்கும், இரு தரப்பு மக்களை பற்றி தெரியவில்லை. முதல் முறையாக ஓட்டு போடுவோரும், என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தான், அந்த இரு தரப்பினர் என கூறினார்

பாலியல் கொடூரத்துக்கு, துாக்கு தண்டனையை உறுதி செய்த, இந்த சகோதரனை மீண்டும் பிரதமராக்க, அவர்கள் முடிவெடுத்து விட்டனர். அதற்காகவே, சாரை சாரையாக ஓட்டுச் சாவடிக்கு வந்து ஓட்டளிக்கின்றனர் என குறிப்பிட்டார்..

நாடு முழுவதும், ஒவ்வொரு வீட்டில் இருந்தும், மோடி அலை வெள்ளமாக பொங்கிப் பிரவாகமெடுத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வீடு, மின்சாரம், சமையல் எரிவாயு சிலிண்டர், கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்ட மக்கள், 'பட்டதெல்லாம் போதும்' என, தற்போது பதிலடி தருகின்றனர். 

நம் ராணுவத்திற்கான தளவாடங்களில், 70 சதவீதம் வெளிநாடுகளில் தான் கொள்முதல் செய்கிறோம். இதை, முந்தைய காங்கிரஸ் அரசு, ஏ.டி.எம்., போல பயன்படுத்தி வந்தது. இதன் காரணமாகத்தான், நம் வீரர்களுக்கு, குண்டு துளைக்காத ஜாக்கெட்கள் வாங்கும் ஒப்பந்தத்தை, ஆறு ஆண்டுகள் தாமதப்படுத்தியது. இவ்வாறு, அவர் பேசினார்.