அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக மற்றும் மோடிக்கு எதிராக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக களம் இறங்கியுள்ளார். காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள், இடது சாரிகள் என அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.

இது தொடர்பாக நேற்று ராகுல் காந்தி, சரத்பவார், கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் சந்தித்துப்  பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் பாஜக தொடர்ந்து அராஜகங்களை அரங்கேற்றி வருவதாகவும், எப்படி எல்லாம் மாநில அரசை ஆட்டி வைக்கிறார்கள் என்பது குறித்தும் புட்டுப்புட்டு வைத்தார்.

சசிகலா குறித்து பேசிய அவர், நான் அவருக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம் என்றார். அவர் தவறு செய்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுங்கள். தண்டனை வாங்கிக் கொடுங்கள், சொத்து குவிப்பு வழக்கு என்பது உச்சநீதிமன்றத்தின் கைகளில்தான் உள்ளது.

அந்த வழக்கின் தீர்ப்பு குறித்து நீதிமன்றமும் எந்த அறிவிப்பும் செய்யவில்லை. அதே நேரத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க சசிகலா தயாரானார். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி அவரை பதவி ஏற்க விடாமல் கவர்னர் காலம் தாழ்த்தினார்.

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு  தேதி  குறித்து உச்சநீதிமன்றம் எந்த அறிவிப்பாணையும் வெளியிடாதபோது, அதை காரணம் காட்டிதான் சசிகலாவை பதவி ஏற்க விடாமல் தடுத்தார்.இதன் பின்னணியில் மோடி அரசாங்கம் இருந்தது என சந்திர பாபு நாயுடு ஓபனாக குற்றம்சாட்டினார்.