81வது பிறந்த நாளை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாசுக்கு டெல்லியில் இருந்து பிரதமர் மோடி மட்டும் அல்லாமல் தமிழகத்திலும் ஸ்டாலின், ஈபிஎஸ் என வாழ்த்துகள் கூறியிருப்பது தமிழக அரசியலில் அவருக்கான முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

தமிழகம் இதுவரை சந்தித்திராத வகையிலான ஒரு தேர்தலை அடுத்த ஆண்டு எதிர்கொள்ள உள்ளது. பெரிய அளவில் ஆளுமைகள் யாரும் இல்லாமல் சட்டமன்ற தேர்தலை மக்கள் எதிர்கொள்ள உள்ளனர். அரசியல் கட்சியினரும் கூட இதுநாள் வரை ஒரே ஒரு தலைவரை மட்டுமே நம்பி களம் கண்ட நிலையில் வரப்போகிற தேர்தல் அப்படி இல்லை என்கிற நிதர்சனத்தை புரிந்து வைத்துள்ளனர். தலைவர்களுக்காக வாக்கு விழுந்த காலம் போய், இனி வாக்கு வங்கி அடிப்படையிலான தேர்தலுக்கான தொடக்கமாக வரும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று கருதப்படுகிறது.

அதிலும் திமுக – அதிமுக என இருபெரும் கட்சிகள் மோதிக் கொண்டாலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று தெளிவாக கூற முடியாத நிலை உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக க்ளீன் ஸ்வீப் செய்திருந்த நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதனால்மக்கள் திமுகவை, ஸ்டாலினை முழுமையாக ஏற்றுக் கொண்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. அதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட நிர்வாகத்தில் சிறப்பு வாய்ந்தவராக இருந்தாலும் மக்களை கவரும் வகையிலான நடவடிக்கைகளில் இதுவரை இறங்கவில்லை.

எனவே சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் மிக மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை ஸ்டாலின், எடப்பாடி புரிந்தே வைத்துள்ளனர். சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு கிடைக்கலாம், தோல்வியும் அடையலாம். எனவே சட்டப்பேரவை தேர்தலுக்கு வலுவான கூட்டணி அவசியம் என்று இரு கட்சிகளுமே கருதுகிறது. அதன் வெளிப்பாடு தான் 81வது பிறந்த நாள் அன்று ராமதாசுக்கு முதல் ஆளாக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது. அதிலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலின் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியும் கூட ராமதாசிடம் பேசியுள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் வட மாவட்டங்களில் பாமகவிற்கு இருக்கும் வாக்கு வங்கி தான். குறிப்பிட்ட சில மாவட்டங்களில் திமுக, அதிமுகவிற்கு இணையான வாக்கு வங்கி பாமகவிற்கு உள்ளது. எனவே வட மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்க கூடிய சக்தியாக பாமக உள்ளது. அடுத்த தேர்தலில் பாமக இடம்பெறும் கூட்டணி தான் வட மாவட்டங்களில் அதிக இடங்களை வெல்லும் என்கிற கருத்தும் நிலவுகிறது. தற்போதைக்கு அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக அதனை தொடரும் என்று கூறுவதற்கு இல்லை.

சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகள் என்பதில் ராமதாஸ் உறுதியாக இருப்பார். கடந்த 2001 சட்டமன்ற தேர்தல் முதலே தமிழகத்தில் ஆட்சியில் பங்கு எனும் கனவுடன் கட்சியை நடத்தி வருகிறார் ராமதாஸ். அதற்கான வாய்ப்பு தற்போது வந்துள்ளதாகவே ராமதாஸ் உறுதியாக நம்புகிறார். கணிசமான தொகுதிகளை பெற்று அதில் வென்றுவிட்டால் அடுத்து அமைய உள்ள அரசியல் நிச்சயம் பங்கு கேட்க முடியும் என்பது தான் அவரது திட்டம். எனவே அடுத்து அமைய உள்ள அரசு மைனாரிட்டி அரசாக இருக்க வேண்டும் என்பதற்கு தகுந்த வகையில் ராமதாஸ் காய் நகர்த்தக்கூடும் என்கிறார்கள்.

எனவே திமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவாக இருந்தாலும் சரி இதுவரை பாமகவிற்கு யாரும் வழங்காத அதிக தொகுதிகளை கேட்டுப்பெறும் முடிவில் ராமதாஸ் உள்ளார் என்கிறார்கள். எனவே அவர் அதிமுக கூட்டணியில் தொடர்வார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று சொல்கிறார்கள். இதனை பயன்படுத்தி ராமதாசை தங்கள் பக்கம் இழுக்க திமுக முயற்சிக்க கூடும் என்றும் அதனால் தான் ஸ்டாலினே ராமதாசை தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதே சமயம் ராமதாஸ் தான் தமிழக அரசியலில் தற்போது திமுக, அதிமுகவிற்கு அடுத்த சக்தி வாய்ந்த அரசியல் கட்சியின் தலைவர் என்கிற வகையில் பிரதமரும் ராமதாசை தொடர்பு கொண்டுபேசியதாக சொல்கிறார்கள்.