17 வது நாடாளுமன்றத்தின் பிரதமர் யார்? சபாநாயகர் யார்? அமைச்சர்கள் யார்?  நாட்டை வழி நடத்தும் சக்தி எது என்கிற கேள்விகளுக்கெல்லாம் 23ம் தேதி நள்ளிரவுக்குள் பதில் கிடைத்து விடும்.

 

தேசிய ஜனநாயகக்கூட்டணி என்ற பெயரில் மோடி தலைமையில் தேர்தலை சந்தித்தனர். எதிர் தரப்போ ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ராகுல் தலைமையில் களத்தில் குதித்தனர். கடந்த முறை பாஜக அருதிப்பெரும்பான்மையை தாண்டி அளவுக்கு அதிகமான இடங்களை பெற்றதால், யாருடைய உதவியும் தேவைப்படவில்லை. இதனால் தான் என்னவோ கடந்த 5 ஆண்டுகளாக பிரதம் மோடி யாரையும் மதிக்கவுமில்லை, யாரையும் திரும்பிப் பார்க்கவுமில்லை.

இதுபோன்ற சில காரணங்களுக்காக மட்டுமே  என்டிஏ கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு அமைச்சர்களை ராஜினாமா செய்யச்சொல்லி விட்டு ஆந்திராவுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கவில்லை எனக்கூறி ஆதரவை வாபஸ் பெற்று வெளியேறினார். 300 -க்கும் மேற்பட்ட இடங்களை கையில் வைத்திருந்தால் மோடி ஆட்சி ஸ்மூத்தாக சென்றது. ஆனால், வேறு ரூபத்தில் சொறிந்து கொண்டே இருந்தார் சந்திரபாபு. வெற்றி பெறப்போகிறார் என்ற கோணத்தில் ஒய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரகசிய கூட்டு பாஜகவுடன் வைத்துள்ளதாக நம்பிய சந்திரபாபு பாஜக மற்றும் மோடிக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டத் தொடங்கினார். 

அன்று தொடங்கியது சந்திரபாபு மீதான மோடியின் கோபம். ஆந்திரா வரும்போது மோடிக்கு கடும் எதிர்ப்பை தெலுங்கு தேசம் கட்சியினர் காட்டினர். இதனால் மோடியின் கோபம் மேலும் அதிகமானது. இது மட்டுமின்றி பாஜக எதிர்ப்பு சக்திகளான திமுக, மம்தா, ஃபரூக் அப்துல்லா, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி தலைவர்களைஉயும் ஓடி ஓடி சந்தித்தார் சந்திரபாபு. இத்தோடு நில்லாமல் தற்போது வரை மோடிக்கு எதிரான அனைத்து வேலைகளையும் விடாப்பிடியாக செய்து வருகிறார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியபடி ஒருவேளை மோடி ஆட்சி அமைத்து விட்டால் இவ்வளவு குடைச்சல்களைக் கொடுத்த சந்திரபாபு நாயுடுவுக்கும் அவரது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மோடி தரப்பில் இருந்து சந்திரப்பபு நாயுடுவுக்கு குடைச்சல் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சந்திரபாபு நாயுடு அளவுக்கு செயலில் இறங்காவிட்டாலும் வார்த்தைகளாலேயே மோடியை கேவலப்படுத்தி விட்டார் மம்தா. எதிரிகளின் விமர்சனத்தை எளிதில் எடுத்துக் கொள்ளாதவர் மோடி என்பது ஊரறிந்த ரகசியம் . அதனால் அடுத்த குறி மம்தாவுக்கு. மூன்றாவதாக ராகுலை முதன் முதலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அத்தோடு மட்டுமின்றி மோடிக்கு எதிராகவும், இந்து கடவுள்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வந்தார். உச்சமாக ’சேடிஸ்ட் மோடி’என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் ஸ்டாலின் மீது மோடி கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சந்திரபாபு , மம்தா ஆதரவு அளித்தால் கூட தாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என மோடியும், அமித் ஷாவும் உறுதியான முடிவெடுத்துள்ளார்களாம். 

ஆனால், ஆட்சிக்கு அருதிப்பரும்பான்மை கிடைக்காவிட்டால் திமுக உதவி தேவைப்படும் என்பதால் ஸ்டாலினை எதிரிகள் பட்டியலில் பாஜகவினர் 3ம் இடத்தில் வைத்துள்ளார்களாம். எது எப்படியோ பாஜகவினர் காங்கிரஸ் கூட்டணியை பழிவாங்குகிறார்களா? அல்லது காங்கிரஸ் கட்சியினர் பாஜக கூட்டணியினரை பழவாங்குகிறார்களா? என்பது நாளை மறுநாளுக்குள் தெரிந்து விடும்.