கருப்புக் கொடிக்கு  பயந்து நீங்க வான் வழியாக வந்தாலும் எதிர்ப்பைத் தெரிவிப்போம் என்றும் ஹெலிக்காப்டரில் வந்தால் லட்சக்கணக்கான கருப்பு பலூன்களை பறக்க விடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களுக்கு துரோகம் செய்த பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து, இன்று கருப்புக் கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக, காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் இன்று கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

ஆனால் மோடி இன்று பெரும்பாலும் தரை வழிப்பயணத்தை தவிர்த்து விமானம் மற்றும் ஹெலிக்காப்டர் பயணத்தையே மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக செய்தியளர்களிடையே பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மோடி அவர்கள் கருப்புக் கொடிக்கு பயந்து தரை வழிப்பயணத்தை தவிர்த்தால் நாங்கள் லட்சக்கணக்கான பலூன்களை வானில் பறக்கவிட்டு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம் என கூறினார்.