அண்மையில்  நடந்து முடிந்த மக்களவைத்  தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல்  வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதையடுத்து மோடி நாளை மாலி 7 மணியளவில்  பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

பாஜக வெற்றி பெற்றதைத் தொடந்தது அக்கடசியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்படடார். இதையடுத்து மோடி பாஜக மூத்த தலைவர் அத்வானி . முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான  பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அவரை பிரணாப் வரவேற்றார். 

பின் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மோடிக்கு பிரணாப் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில்  பிரணாப் முகர்ஜி மிகச் சிறந்த ராஜதந்திரி. அவரை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி தரும் விஷயம். அவரது பொது அறிவும் வியூகங்களும் அபாரமானவை. அவரது ஆசியை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என தெரிவித்துள்ளார்.

மோடியின் இந்த பாராட்டுக்கு  நன்றி தெரிவித்த பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. கூடுதல் பலத்துடன் அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதற்கு வாழ்த்துக்கள். அவரது எண்ணம் தொலைநோக்கு பார்வை ஆகியவை நிறைவேற வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, தற்போது முழு ஓய்வில் இருந்து வருகிறார். ஏற்கனவே பிரணாப் டெல்லியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் பங்கேற்றது காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.