கொரனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் பங்கேற்றார். தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பங்கேற்றனர். 

தமிழகத்தில் கொரனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், தமிழகத்தில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து தலைமைச் செயலாளரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.  தமிழகத்தில் நாள்தோறும் நடத்தப்படும் பரிசோதனைகள், காய்ச்சல் முகாம்கள், கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் பிரதமர் மோடியிடம் விளக்கினார். மேலும் கொரனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும், கொரனா தடுப்பு பணிகளை கண்காணிக்க தமிழகத்தில் மூத்த ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் அதிகாரிகள் அடங்கிய 11 ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதையும் பிரதமர் மோடியிடம், தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் எடுத்துரைத்தார். 

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தமிழகத்திற்கு கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் ராஜிவ் ரஞ்சன் கோரிக்கை விடுத்தார்.