தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவ்வப்போது செய்தியாளர்களிடம் எதையாவது பேசி வம்பில் மாட்டிக் கொள்வார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மோடிதான் காப்பாற்றி வருகிறார் என்றும் மேல இருக்கிறவர் எல்லாம் பார்த்துக் கொள்வார் என்றும் பேசி சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அம்மாவின் ஆளுமை என்பது வித்தியாசமானது. அவர் என்ன முடிவெடுக்க வேண்டுமோ அதை தில்லாக  முடிவெடுப்பார்.

ஜெயலலிதா எடுக்கும் முடிவுகள் அதிமுகவையும், தமிழக மக்களையும் பாதுகாக்கும் என தெரிவித்த ராஜேந்தி பாலாஜி, தற்போது அம்மா இல்லாத சூழ்நிலையில்  பிரதமர் மோடி தான் எங்க டாடி எனக் கூறி செய்தியாளர்களை  அதிர்ச்சி அடையச் செய்தார்.

மோடி எங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே அவர் தான் டாடி என்றும் அமைச்சர் தெரிவித்தார். அம்மா உயிருடன் இருக்கும்போது மோடியுடன் சகோதர உணர்வுடன் பழகினார் என்றும் அவர் மீது அம்மா மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்றும் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், மோடி மீது இப்போது மட்டுமல்ல வாஜ்பாயி காலத்தில் இருந்தே அம்மா மதிப்பு வைத்திருந்தார் என்றும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சிறுபான்மையினர் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் சிறுபான்மையினர் அனைவரும் எங்கள் கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்,