முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணத்தில் பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும் என்று என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருப்பது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

காங்கிரஸ் கட்சி தமிழக தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் இன்னும் சந்தேகம் இருக்கிறது என அனைவரும் கூறி வருகின்றனர். பிரதமர் மோடியையும் கூட இதில் விசாரிக்க வேண்டும்.  ஜெயலலிதா மருத்துவமனையில் நூறு நாட்கள் இருந்தபோது ஒரு நாள் கூட ஏன் பார்க்க வரவில்லை. இதைப்போல் ஏராளமான சந்தேகங்கள் இருக்கின்றன. அதனால் எல்லோரையும் விசாரிக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதில் யார் தவறு இழைத்திருந்தாலும் தண்டிக்கபட வேண்டும்.

மோடி அரசு பணக்காரர்களுக்கு உதவி வருகிறது. ஆனால் ஏழை மக்களை வஞ்சித்து வருகிறது. ராகுலின் நோக்கம் வறுமை இல்லாத இந்தியாவை உருவாக்குவது. வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். ராகுல் காந்தி பிரதமர் ஆவார். மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டது. பாஜகவின் வாக்கு எண்ணிக்கை குறையும். மோடி அலை ஓய்ந்து தற்போது ராகுல் அலை வீசத் தொடங்கியுள்ளது. பிரியங்கா காந்தி சந்தித்த அளவு கூட மோடி பத்திரிக்கையாளர்களை சந்தித்தது இல்லை.

கொடநாடு விவகாரத்தில் தமிழக ஆளுநர், முதல்வரை உடனடியாக பதிவி நீக்கம் செய்ய முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவரே தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இல்லையென்றால் உள்துறையாவது வேறு நபருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும். மத்திய அரசு தலையிட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவோ அல்லது சிபிஐ விசாரணை நடத்தவோ வேண்டும். இதில் ஏதாவது நடந்தால்தான் உண்மை தெரிய வரும்’’ என அவர் தெரிவித்தார்.