கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தொடர்ந்து உலக நாடுகளுக்கு பல்வேறு வகையில் உதவி வரும் இந்தியாவுக்கும், அதன் பிரதமர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ்  அதானோம் தெரிவித்துள்ளார்.  தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்தியாவின் உதவிகளை நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார். 

கடந்த 10 மாதங்களுக்கு மேலாக ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்து வந்த கொரோனா வைரஸ் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும்  பிரிட்டனில் உருவாகியுள்ள உருமாறிய கொரோனா சர்வதேச நாடுகளை மிரட்டி வருகிறது.  இந்நிலையில் நம்பிக்கையூட்டும் விதமாக கொரோனா  தடுப்பூசிகள்  மக்கள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கியுள்ளன. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்குப் அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உலகிலேயே மிகப்பெரிய அளவில்  தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு, கோவேக்சீன் தடுப்பூசிகள் சுகாதாரம் மற்றும்  முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனிதநேய அடிபடையில் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது. இதுவரை நமது அண்டை நாடான பூடானுக்கு ஒன்றரை லட்சம் டோஸ்கள், மாலத்தீவுக்கு 1லட்சம் தடுப்பூசிகள் மானிய உதவியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏழை எளிய நடுத்தர நாடுகள் இந்தியாவின் தடுப்பூசிகளை நம்பியே இருக்கின்றன.  இந்நிலையில் நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கும் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்தவுடன் இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்கும் மானிய உதவியாக தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டிவிட் செய்துள்ளார். 

அதேபோல் சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், மொராக்கோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியாவின் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. வர்த்தக அடிப்படையில் பிரேசில், மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு 22 ஆம் தேதி (நேற்று) தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதாவது இந்திய நாட்டுக்கான தேவையை பூர்த்தி செய்தபடியே வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசியை உற்பத்தி செய்திருந்தாலும், இந்தியா தயாரித்துள்ள தடுப்பூசியையே பெரும்பாலான நாடுகள் விரும்புகின்றன.

விலையும் ஓரளவுக்கு ஒத்துப் போவதால் இந்தியாவின் தடுப்பூசியை பெற பிறநாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இது குறித்து தெரிவித்துள்ள சீரம் நிறுவனம் இரண்டாம் கட்ட உற்பத்தி பெரும்பாலான நாடுகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையுமென அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் சேவையை  பல்வேறு நாடுகளும் மனமார பாராட்டியுள்ளன. ஏற்கனவே இந்தியாவின் கொடையை மனபூர்வமான பாராட்டி வரும் உலக சுகாதார நிறுவனம், இந்த முறையும் இந்தியாவின் தடுப்பூசி விநியோகத்தை உவகையுடன் வரவேற்றுள்ளது. 

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், உலகளாவிய covid-19 க்கு எதிரான போரில் இந்தியா தொடர்ந்து பல்வேறு வகைகளில் சர்வதேச நாடுகளுக்கு உதவி வருகிறது. எனவே இந்தியா மற்றும் அதன் பிரதமருக்கு எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிரா, அறிவைப் பகிர்ந்துகொள்வது உட்பட நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருந்தால் மட்டுமே இந்த வைரஸை தடுக்க முடியும். அதிலிருந்து பல உயிர்களையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற முடியும் என அவர் பதிவிட்டுள்ளார். இது சர்வதேச அளவில் இந்தியாவின் சேவைக்கு கிடைத்த அங்கிகாரமாக கருதப்படுகிறது.