ஊழல் ஒழிப்பைப் பற்றி அதிகமாக பேசும் பிரதமர் மோடி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க.முதலமைச்சர்களின் ஊழல் குறித்து ஏன் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மார்க்கல் கிராமத்தில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது-

பனாமா பேப்பர்ஸ் ஊழல் பட்டியலில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதே பனாமா பேப்பர்ஸ் ஊழல் பட்டியலில் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரின் குடும்பத்தினர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. முதலமைச்சர் ராமன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்யாதது ஏன்?

ஏனெனில் அவர் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சில் உள்ளார். எனவே அவர் ஊழல் செய்துகொள்ளலாம் என்ற நிலை உள்ளது.

பிரதமர் மோடி ஊழல் ஒழிப்பு குறித்து நிறைய பேசுகிறார். ஆனால் ஊழலில் ஈடுபட்டுள்ள சத்தீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங் ஊழல் குறித்து பிரதமர் மோடி பேசாமல் மவுனம்சாதிப்பது ஏன்?

இதேபோல ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. முதலமைச்சர் வசுந்தரா ராஜேயும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது ஏன்?

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு ஏன் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆர்.எஸ். எஸ்.காரர்கள் இங்கு வந்து வேலைசெய்துவருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் பலத்த எதிர்ப்பின் காரணமாகத்தான் விவசாயிகளை பாதிக்கும் நில மசோதாவை மத்திய அரசு விலக்கிக்கொண்டது.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக

மத்திய பா.ஜ.க. அரசு மறைமுகமாக இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மலைவாழ் மக்களை உள்ளூரில் வாழ வைக்காமல் அவர்களை டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு துரத்தியடிக்கிறது.

மோடியின் செல்லாத நோட்டு திட்டம் சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ள கருப்புப்பண முதலைகளை பாதிக்கவில்லை. மாறாக ஏழை எளிய மக்கள் தான் மோடியின் இந்த பண ஒழிப்பு திட்டத்தால் பாதிக்கப்பட்டனர்.

பொதுமக்கள் எவ்வளவு பணத்தை திருப்பிச் செலுத்தியுள்ளனர் என்பதைக்கூற பிரதமர் மோடி தயக்கம் காட்டி வருகிறார்.பிரதமர் மோடி நாட்டில் இருந்த கறுப்புப்பணத்தை ஊழல்பேர்வழிகளுக்கு வெள்ளைப்பணமாக மாற்றிக்கொடுத்துவிட்டார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மலைவாழ் மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.