ஏ.என்.ஐ. ஊடகத்துக்காக பிரபல நடிகர் அக்ஷய் குமாருக்கு பிரதமர் மோடி  இன்று சிறப்பு பேட்டி அளித்தார்.  அதில் அரசியல் இல்லாமல், அதே நேரத்தில் தனது நெருங்கிய அரசியல்வாதி நண்பர்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

அப்போது எதிர்க்கட்சியில் தனக்கு மிக நெருக்கமான நண்பர்களாக மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜியையும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தையும் குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்தினார்.
.


அரசியலைப் பொறுத்தவரை மம்தாவும் மோடியும்  பரம வைரிகள் போல பேசிக் கொள்கிறார்கள். தேர்தல் பரப்புரையின் போது கடுமையான வார்த்தைகளினால் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொள்கிறார்கள். 

வங்கதேச  பிரதமர் ஷேக் ஹசீனா எனக்கு வருடத்தின் சில சிறப்பான நாட்களை ஒட்டி இனிப்புகளை பரிசாக அனுப்பி வைப்பார். இது மம்தா பானர்ஜிக்கு தெரிய வந்தபிறகு அவரும் எனக்குப் பரிசுகளை அனுப்ப ஆரம்பித்தார். 

இனிப்புகளையும் குர்தாக்களையும் எனக்கு மம்தா பரிசாக அனுப்பி வைப்பது வழக்கம். ஒவ்வொரு வருடம் குர்தாக்களை எனக்கு அனுப்பி வைப்பார் மம்தா. இந்த வருடம்கூட ஓரிரு குர்தாக்களை தேர்ந்தெடுத்து வைத்திருப்பார் என மோடி குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து குலாம் நபி ஆசாத் குறித்தும் மோடி மனம் திறந்து பேசியுள்ளார். நான் குஜராத்தின் முதலமைச்சர் ஆகாத நிலையில் ஒரு நாள் சில வேலைகளுக்காக டெல்லி சென்றிருந்தபோது நாடாளுமன்றம் சென்றிருந்தேன். 

அங்கே குலாம் நபி ஆசாத்தோடு பேசிக்கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டே வெளியே வரும்போது பத்திரிகையாளர்கள் சிலர் என்னிடம் இதுபற்றி ஆச்சரியமாய் கேட்டார்கள். அதற்கு குலாம் நபி ஆசாத், நாங்கள் ஒரு குடும்பத்தினரைப் போன்ற உணர்வோடு ஒன்றுபட்டிருக்கிறோம். இதெல்லாம் வெளியுலகத்துக்குத் தெரியாது என பதில் சொன்னார் என அந்த பேட்டியின்போது மோடி தெரிவித்தார்.