குடியுரிமை திருத்தச் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு வட மாநிலங்களிலும், டெல்லியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்களும், பொது மக்களும் பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
 
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் பர்ஹாயத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இது குறித்து  பிரதமர் மோடி  பேசினார். அப்போது, நாட்டில் எந்தவொரு குடிமகனும் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட மாட்டான் என்று நான் உறுதியளிக்கிறேன். காங்கிரசும் அதன் நட்பு கடசிகளும் அரசியல் நோக்கத்திற்காக முஸ்லிம்களைத் தூண்டி விடுகின்றன.

கல்லூரி மாணவர்கள் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துங்கள், நாங்கள் உங்கள் கூற்றை கேட்கிறோம். சில கட்சிகள், சமூக விரோதிகள் மாணவர்களை தூண்டி விடுகின்றன. காங்கிரஸ் கொரில்லா அரசியலை நிறுத்த வேண்டும். அரசியலமைப்பு சட்டம்தான் எங்களது புனித புத்தகம் என கூறினார்..

பாகிஸ்தான் மக்கள் அனைவருக்கும் குடியுரிமை தர காங்கிரஸ் தயாரா? தயார் என்று வெளிப்படையாக கூற தைரியம் இருக்கிறதா? காஷ்மீர், லடாக்கில் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என கூற  காங்கிரஸ்  தயாரா என்று நான் சவால் விடுகிறேன். 

இந்திய இஸ்லாமியர்களை அச்சமூட்டுவதற்காக காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் பொய்களை கட்டவிழ்த்தது விடுகின்றன என மோடி கடுமையாக குற்றம்சாட்டினார்.