பிரதமர் மோடியின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் மாதம்  17-ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பாஜக  சார்பில் நாடு முழுவதிலும் செப்டம்பர் 14 முதல் 20 ம் தேதி வரையில் ஒரு வாரம் சேவா சப்தா அல்லது சேவை வார பிரசாரமாக கொண்டாடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.. அப்போது கட்சி தொண்டர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. குழுவின் கன்வீனராக அவினாஷ்ராய் கன்னா நியமிக்கப்பட்டுள்ளார். குழுவில் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன்ராம் மேக்வால், தேசிய செயலாளர்கள் சுதாயாதவ், சுனில்தியோதர், உட்பட பலர் இடம்பெற்றுள்ளனர். 

சேவை வார விழாவினையொட்டி பாஜக தொண்டர்கள் ரத்ததானமுகாம்கள், சுகாதார முகாம்கள், கண்பரிசோதனை மற்றும் நலிவடைந்தோர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுவர். 

மேலும் பிரதமர் மோடியின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை விளக்கும் புத்தகங்கள் விநியோகிக்கவும், கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்படும்.  இது தவிர பிளாஸ்டிக்கிற்கு எதிரான இயக்கத்திற்கு பிரதமரின் அழைப்பை ஏற்று எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் அனைவரும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்துவார்கள் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.