நீட் தேர்வு ரத்து உள்பட பல விவகாரங்களில் மத்திய அரசை திமுக விமர்சித்து வருகிறது. மேலும் கடந்த காலங்களில் பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கோ பேக் மோடி என்று திமுகவினர் சமூக ஊடங்கங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளை திறக்க அடுத்த மாதம் ஜனவரி 12-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமர் பங்கேற்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. மாவட்டத்துக்கு ஒன்று என்ற அடிப்படையில் தமிழகத்தில் சுமார் ரூபாய் 3575 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் பணியை மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் மருத்துவ இடங்களும் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆட்சியில் மத்திய அரசு உதவியுடன் கட்டப்பட்ட இந்த மருத்துமனைகளை திறந்து வைக்க ஜனவரி 12- ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவருடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாயாவும் வர உள்ளார். மேலும் புதிய கல்லூரி ஒவ்வொன்றிலும் தலா 150 மருத்துவ இடங்கள் வீதம் 1,650 மாணவர்களைச் சேர்க்க அகில இந்திய மருத்துவ கவுன்சிலும் அனுமதி வழங்கி இருக்கிறது. மேலும் அனைத்து கல்லூரிகளையும் மத்திய குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. அதன் தொடர்ச்சியாக மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தது.
விருதுநகரில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் மோடி தமிழகம் வருவதே இதுவே முதன் முறை. மேலும் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வு ரத்து உள்பட பல விவகாரங்களில் மத்திய அரசை திமுக விமர்சித்து வருகிறது. மேலும் கடந்த காலங்களில் பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கோ பேக் மோடி என்று திமுகவினர் சமூக ஊடங்கங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே இதுதொடர்பான செய்தியை ஷேர் செய்துள்ளர் தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “ ‘Go Back’ என்றவர்கள், ‘Please come' என்கிறார்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
