பிரதமர் மோடியைப் பார்த்து முன்பு அனைவரும் அச்சப்பட்டனர். ஆனால், இப்போது எல்லோரும் துணிந்துவிட்டனர். மோடி அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் போராட்டம் நடத்தத் தொடங்கிவிட்டனர் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கிண்டல் செய்துள்ளார்.'

ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்ள மங்களகிரியில் போலீஸ் தொழில்நுட்ப மையத்தை அம்மாநில முலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரலாற்றில் எங்கேயாவது நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்காக ஒரு நாட்டின் பிரதமர் உண்ணாவிரதம் இருந்து பார்த்திருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தை நடத்த முடியாமல் போனது மத்திய அரசின் இயலாமைத்தனம், செயலற்ற போக்கு. அதற்கு உண்ணாவிரதம் இருந்தால் அனைத்துக்கும் தீர்வு வந்துவிடுமா? என்றும் சந்திர பாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு கடந்த 4 ஆண்டுகள் காலம் பொறுமையாக இருந்தோம். ஆனால், மத்திய அரசு எங்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. இனிமேலும், பாஜகவுடன் இருந்தாலும் பயனில்லை என்பதால், ஆட்சியில் இருந்து வெளியேறினோம் என்றார்.

சென்னைக்கு மோடி சென்றபோது தமிழக மக்கள் எப்படி எதிர்ப்பு தெரிவித்தார்களோ அதேபோன்ற எதிர்ப்புதான் மோடி ஆந்திர மாநிலம் வந்தாலும் கிடைக்கும். அதைக் காட்டிலும் அதிகமான எதிர்ப்பைத் தெரிவிப்போம், என்னைப் பொறுத்தவரை ஆந்திர மாநிலத்துக்கு வரும் அளவுத்து துணிச்சல் மோடிக்கு கிடையாது என அவர் கூறினார்.

சென்னைக்கு பிரதமர் மோடி வந்தார் என்றால் தமிழகத்தில் நடப்பது பாஜகவின் கைப்பாவை ஆட்சி. அதனால், தமிழகத்துக்கு துணிச்சலாக பிரதமர் சென்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னர், அனைவரும் பிரதமர் மோடியைப் பார்த்து அச்சப்பட்டனர். ஆனால், இப்போது அனைவரும் துணிந்துவிட்டனர். மோடி அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் போராட்டம் நடத்தத் தொடங்கிவிட்டனர் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.