சாந்திநிகேதனின் விஸ்வ-பாரதி  பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு காலை 11 மணிக்கு உரையாற்ற உள்ளார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க ஆளுநர், மத்திய கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வ-பாரதி  பல்கலைக்கழகம் கடந்த 1921 ஆம் அண்டு குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் நிறுவப்பட்டதாகும்.  விஸ்வ-பாரதி நாட்டின் மிகப் பழமையான மத்திய பல்கலைக்கழகமாகும். மே 1951 இல், விஸ்வ-பாரதி ஒரு மத்திய பல்கலைக்கழகமாகவும், "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்" என்றும் பாராளுமன்றச் சட்டத்தால் அறிவிக்கப்பட்டது. 

குருதேவ் தாகூர் வகுத்த கொள்கைகளை பின்பற்றி பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்தது, பின்னர் படிப்படியாக காலத்திற்கு ஏற்ப நவீன பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அது உருவெடுத்தது.. பிரதமர் பல்கலைக்கழகத்தின் அதிபராக இருந்து வரும் நிலையில் அவர் அதன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.  இந்நிலையில் முன்னதாக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு  பங்கேற்று உரையாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.