மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோயமுத்தூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தபோது, முஸ்லீம் ஜமாத் தலைவர்களை சந்தித்து முஸ்லீம்களின் உரிமைகளுக்கு என்றென்றும் அதிமுக பாடுபடுவதாக கூறியுள்ளார். முஸ்லீம்களுக்கு எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும்  அதிமுக அரசு அதைத் தடுக்கும் என்றும் கூறியுள்ளார். அப்படி கூறுபவர் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது ஏன்? மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் அந்த சட்டத்துக்கு எதிராக வாக்களித்திருந்தால் அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது.
முஸ்லீம்களை அன்னியர்களாகக் கருதவில்லை என்று முதல்வர் இப்போது கூறுகிறார். இதுபோன்ற எண்ணம் தேர்தல் நேரத்தில்தான் அவருக்கு வருகிறது. தேர்தல் விரைவில் வர உள்ளதால் தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிச்சாமி இதுபோன்ற சந்திப்புகளை நடத்துகிறார்.  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மிக பெரிய வெற்றியைப் பெறும். கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்தே மனிதநேய மக்கள் கட்சி தனி சின்னத்தில்தான் போட்டியிட்டு வருகிறது. அதேபோல் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம்.


தேர்தல் அறிவித்த பிறகு திமுக கூட்டணியில் தேவையான இடங்களை நாங்கள் கேட்டு பெறுவோம். கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் மு.க. ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார். கூட்டணி கட்சிகளை நல்லிணக்கத்தோடு நடத்துகிறார் ஸ்டாலின். திமுக கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்திப்பதாக கூறுவது தவறான தகவல். அவ்வாறு எந்த நிர்பந்தமும் அவர்கள் விதிக்கவில்லை.
சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அப்போது அவருக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அவர் விடுதலையாகும் சூழலில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா வெளியே வந்தால் யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவார்களோ அவர்கள் செய்த கூட்டு சதியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.” என ஜவாஹிருல்லா தெரிவித்தார்.