மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எம்எல்ஏ ஒருவர் தன் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து குழந்தையும் பெற்றெடுத்திருக்கிறார். இவர் எடுத்த முயற்சி அப்பகுதி மக்கள் மட்டுமல்ல அனைத்து செல்வந்தர்கள் அரசு அதிகாரிகள் எம்எல்ஏ  எம்பி அமைச்சர்கள் என அனைவரும்  அரசு மருத்துவமனையை பயன்படுத்த வேண்டும் என்பதே அவரது வேண்டுகோளாக அமைந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி எம்எல்ஏ  கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நாகராஜன்.

கடந்த 2003-ம் ஆண்டு திருமணமான, நாகராஜனுக்கு திருமணமாகி 16 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. தற்போது 16 வருடங்களுக்குப் பிறகு கருவுற்ற தனது மனைவிக்கு, தொடக்கத்தில் இருந்து பிரசவிக்கும் வரை, தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் மருத்துவம் பார்த்து வந்துள்ளார் நாகராஜன்.

 தனியார் மருத்துவமனை மீது மோகம் அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில், 16 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்தாலும், பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக, தான் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற மனைவியின் விருப்பத்திற்கு ஏற்ப சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக நாகராஜனின் மனைவி சிவசங்கரி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 9-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.மேலும் இதே சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி குழந்தைகள் பிரிவு வார்டு அருகில் தான், கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தாய், சேய் இருவரும் இன்று நலமுடன் வீடு திரும்பினர்.