டிராஃபிக் போலீசாக மாறி போக்குவரத்து நெரிசலை சீர் செய்த புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த்க்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஈசிஆர் சாலை, கொக்கு பார்க் சிக்னலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையின் காரணமாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார்  வேலை நேரம் முடியும் முன்பாகவே சென்றுவிட்டர்கள்.

இதனால் அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு நெரிசலில் சிக்கி தவித்துள்ளன. அப்போது அந்த வழியாக காரில் சென்ற என்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் இறங்கி போக்குவரத்து காவலர் போல் போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார். எம்எல்ஏ ஒருவர் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டதை தொடர்ந்து  போக்குவரத்து நெரிசல் குறைந்தது. வாகனங்கள் சிரமமின்றி சென்றது.

இதனால் அரை மணி நேரத்தில் போக்குவரத்து நெரிசல் சீர் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து, போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் அங்கிருந்து கிளம்பினார். எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் செய்த இந்த செயலால் பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்த வருகிறது.