அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் வேண்டும்.. அந்த தலைமை  சசிகலா தான் என என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு அதிரடியாக  தெரிவித்து உள்ளார்.

அதிமுகவில் இரு தலைமை இருப்பதால் எந்த ஒரு முடிவும் விரைவாக எடுத்து செயல்படுத்த முடியவில்லை... அதிமுக விற்கு ஒரே தலைமை தான் வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி கொடுத்த அடுத்த நொடியே அதிமுகவினுள் பல்வேறு குழப்பங்கள் உண்டானது.

இதற்கிடையில், அதிமுக தலைமை கழகத்தில் இன்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேறற்றப்பட்டு உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இந்த கூட்டத்திற்கு சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களான கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி உள்ளிட்டோருக்கு அதிமுக தலைமை கழகம் அழைப்பு விடுக்கவில்லை. 

இது குறித்து, விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் தெரிவிக்கும் போது, "எனக்கு அழைப்பு வரவில்லை. எனவே நான் ஆலோசனை கூட்டத்திற்கு செல்லவில்லை... ராஜன் செல்லப்பா சொன்னவாறு, ஒற்றை தலைமை முறையை நான் ஆதரிக்கிறேன்" என தெரிவித்தார்.
மேலும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தெரிவிக்கும் போது, பல்வேறு கருத்துக்களை முன்வைத்து சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

அதன் படி, "நடந்து முடிந்த தேர்தலில் தன் மகன் போட்டியிட்டு தோல்வியுற்ற பின் தான் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என தெரிவித்துள்ளார் ராஜன் செல்லப்பா. அவர் சொல்வது சின்னம்மாவை தான்... துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் அவருடைய மகனின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபட்டார். பாஜகவின் உதவியோடு தன் மகனை வெற்றி பெற செய்து விட்டார். ஆனால் அதிமுகவின் மற்ற வேட்பாளர்களின் வெற்றிக்காக அவர் பாடுபடவில்லை. நல்ல தலைமை என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது பதவியில் உள்ளவர்கள் சுயநலம் மிக்கவராக உள்ளனர். எனவே கட்சிக்கு சுயநலமில்லாத ஒருவர் தலைமை ஏற்க வேண்டும். எம்எல்ஏ பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக தான் பலரும் அமைதியாக இன்றளவும் இருக்கின்றனர். இப்படியே சென்றால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அமைச்சர் சிவி சண்முகம் கூட பாஜகவால் தான் தோற்றோம் என தெரிவித்திருந்தார் என சுட்டிக்காட்டி உள்ளார் பிரபு  

மேலும், "அதிமுகவிற்கு நீங்கள்தான் பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என அன்று சசிகலாவிடம் அவருடைய வீட்டு வாசலில் காத்திருந்து சொன்னார்கள்... ஆனால் பாஜகவின் நெருக்கடியின் காரணமாக சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கினார்கள். இந்த நிலையில் கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டுமென்றால்.. சின்னம்மா தான் தலைமை ஏற்க வேண்டும்" என குறிப்பிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சசிகலா சிறையில் இருந்து விட்டார். இன்னும் 6 மாதம் காத்திருந்தால் போதும்... அவர் சிறையிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியே வர முடியும். அவர் வெளியே வந்துவிட்டால், அனைவரும் சின்னம்மாவுக்கு ஆதரவு கொடுக்க முன்வருவார்கள். அம்மா முதல்வராக இருக்கும் போது மோடி போயஸ் கார்டன் வந்து நேரில் பார்த்து சென்றார். ஆனால் இப்போது இருப்பவர்கள் டெல்லி சென்று மோடியை பார்த்து வருகிறார்கள்.. அம்மா வளர்த்துவிட்ட கட்சி இந்த நிலைமையில் இருக்க கூடாது.. என வருத்தத்தோடு தெரிவித்தாலும், ஆளும் அதிமுகவிற்கு காட்டமான பல கேள்விகளை முன்வைத்துள்ளார் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு.