mla ministers fear about dinakaran re-entry

ஜெயலலிதா இருந்தவரை அடக்கி வாசித்த அனைவரும் இன்று தமக்கென ஒரு தனி ஜமா உருவாக்கிக்கொண்டு, தலைவர்களாக மாறி வருகின்றனர். சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்த பன்னீர்செல்வம், தனக்கென சில எம்.எல்.ஏ, எம்.பி க்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

தினகரனின் ஆட்டம் ஆரம்பித்ததை அடுத்து, முதல்வர் எடப்பாடிக்கென்றும் தனி கோஷ்டி ஒன்று உருவாகி விட்டது, குறிப்பாக அமைச்சர்கள் பலரும், எம்.எல்.ஏ க்களும் அவரை அணியில் உள்ளனர்.

தினகரன் திகார் சிறைக்கு சென்றதை அடுத்து, எடப்பாடியின் கோஷ்டி மேலும் வலுவடைந்துள்ளது. இது தவிர, சாதி ரீதியாகவும், பல எம்.எல்.ஏ க்கள் தனி, தனி அணியாக பிரிந்து கிடக்கின்றனர்

தற்போது, தினகரன் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்து, தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்ததையடுத்து, மூன்றாவது அணியான தினகரன் அணியின் ஆவர்த்தனமும் ஆரம்பமாகி விட்டது.

அதிமுகவை ஒருங்கிணைத்து, கட்டுப்படுத்தி வழி நடத்தும் ஆளுமையான தலைவர்கள் என தற்போது யாரும் இல்லாததால், ஒரு பேரரசாக இருந்த அதிமுக, தற்போது சிறு சிறு சமஸ்தானங்களாக சிதறி கிடக்கிறது.

எடப்பாடிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் ஒரு பக்கம், தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட ஆரம்பித்து விட்டனர்.

ஆனால், தினகரனை எக்காரணம் கொண்டும் ஆட்சி அதிகாரத்தில் அனுமதிக்க கூடாது என்பதில் எடப்பாடி அணி உறுதியாக இருக்கிறது.

அதனால், இதுவரை நீறு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த அதிமுக அணிகளின் கோஷ்டி பூசல், தற்போது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது.

சிறைமீண்ட தினகரன், ஆட்சியையும், கட்சியையும் மீண்டும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர துடியாய் துடிக்கிறார். அதற்கு அவரது ஆதரவு எம்.எல்.ஏ, எம்.பி. க்கள் தொடர்ந்து தூபம் போட்டு வருகின்றனர்.

மறுபக்கம், தினகரனை கட்சி மற்றும் ஆட்சியைவிட்டு அகற்றுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வருகிறது அமைச்சர்கள் மற்றும் கொங்கு கோஷ்டியினர்.

அதனால், தமக்கு செல்வாக்கு இல்லாத ஆட்சி நீடிக்க கூடாது என்று நினைக்கிறார் தினகரன். அதேபோல், தினகரன் கட்டுப்பாட்டில் இயங்காமல் சுதந்திரமாக செயல்படவேண்டும் என்று நினைக்கிறது எடப்பாடியார் ஜமா.

இதனால், தினகரன் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒவ்வொன்றும், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக, நாள் குறிக்கும் விதமாகவே இருக்கிறது என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

மீதமிருக்கும் நான்கு வருஷத்துக்கு, பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காகத்தான், சசிகலாவுக்கு ஆதரவு அளித்தோம். ஆனால், இன்றோ தினகரன் செய்யும் வேலைகள் ஒவ்வொன்றும் ஆட்சியை கவிழ்க்கும் வகையிலேயே இருக்கிறது என்று அச்சத்தில் இருக்கின்றனர் எம்.எல்.ஏ க்கள்.