நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாசுக்கு கூலிப்படையுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்க நடிகர் கருணாசை 7 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர். கடந்த 16ந் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய கருணாஸ், கொலை குறித்து மிகவும் வெளிப்படையாக பேசினார். நாங்கள் எல்லாம் தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்திற்குள் ஒரு கொலையை செய்து முடித்துவிடுவோம் என்று கருணாஸ் கூறியிருந்தார். மேலும் கொலை கூட செய்யுங்கள், ஆனால் என்னிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தனது ஆதரவாளர்கள் சிறை செல்ல நேரிட்டாலும் கூட அவர்கள் பிக்னிக் செல்வது போல் சென்று வரலாம் என்றும் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை தனது வீட்டை விற்றாவது தான் பார்ப்பேன் என்றும் கருணாஸ் கூறியிருந்தார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கருணாஸ் பேசிய ஒரு வார்த்தை போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தது. அதாவது இந்த ஆர்பாட்டத்தை கருணாஸ் நடத்தியதே தியாகராயநகர் சரக துணை ஆணையர் அரவிந்தனுக்கு எதிராகத்தான். ஆர்பாட்டத்தில் பேசிய கருணாஸ் அரவிந்தனுக்கு எதிராக இந்த ஆர்பாட்டம் நடத்த 10 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியதாகிவிட்டது. 

ஒவ்வொரு முறையும் இப்படி 10 லட்சம் ரூபாய் செலவு முடியாது. எனவே அடுத்த முறை வேறு மாதிரி தான் இந்த 10 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்று கருணாஸ் கூறியிருந்தார். அதாவது மேலும் துணை ஆணையர் அரவிந்தன் தொந்தரவு செய்தால் கூலிப்படை மூலமாக 10 லட்சம் ரூபாயை செலவு செய்ய வேண்டி வரும் என்கிற அர்த்தத்தில் தான் கருணாஸ் இப்படி பேசியதாக  போலீசார் கருதுகின்றனர். 

மேலும் கருணாசின் இந்த பேச்சு தான் அவர் மீது கொலை மிரட்டல் புகாரில் வழக்குப் பதிவு செய்ய காரணமாக அமைந்தது. எனவே கருணாசுக்கு கூலிப்படையுடன் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால் தற்போது வேலூர் சிறையில் இருக்கும் கருணாசை காவலில் எடுத்து வந்து சென்னையில் வைத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் போலீசார் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.