தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறு உள்ளது. எனவே அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் செம்ம பிசியாக உள்ளன. இந்த சமயத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் 184 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாகவும் கூறியுள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், அதிமுக தற்போது வன்னியர்கள், கொங்கு கவுண்டர்கள் வளர்ச்சிக்காக மட்டுமே செயல்படுவதாகவும், முக்குலத்தோரின் இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சற்றும் செவி சாய்க்கவில்லை என்றும் குற்றச்சாட்டினார். மேலும் தான் சசிகலாவின் ஆதரவாளன் என்பதால் அதிமுகவால் புறக்கணிக்கப்படுவதாகவும், எனவே அக்கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்தார். 

இதனிடையே கூவத்தூர் விடுதியில் நடந்தது என்ன என்பது குறித்து கருணாஸ் முதன் முறையாக ஓபனாக பேசியுள்ளார். நான் சசிகலாவால் முதல்வராகவில்லை, எம்.எல்.ஏ.க்கள் தான் என்னை முதலமைச்சராக தேர்வு செய்தார்கள் எனக்கூறுகிறார். ஆனால் உலகமே அன்றைய தினம் பார்த்தது சசிகலா எப்படி அவருக்கு ஆசி வழங்கி பதவி வழங்கினார். எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். 

கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்த போது, அங்கு ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்து, அதன் முன்னால் ஒரு அகல் விளக்கை ஏற்றி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சத்தியம் செய்ததை இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார். அன்று நானும், தனியரசு அண்ணனும் அங்கு இருந்தோம். நாங்கள் இருவரும் அதிமுகவை சாராதவர்கள் என்பதால் விளக்கில் சத்தியம் செய்யவில்லை. என்ன சத்தியம் செய்தார்கள் என்பது சசிகலாவிற்கும், அதிமுகவினருக்கும் மட்டுமே வெளிச்சம் என கொட்டித்தீர்த்துள்ளார்.