ஒரு போட்டோ எடுத்துக்கொண்ட ஒரே ஒரு  அடையாளத்தை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் முன்னின்று நடத்தியதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்க தமிழகத்தில் சிலர்  முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் மறைமுகமாக சீண்டினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 112-வ து ஜெயந்தி விழா, 57-வது குருபூஜை விழா என இரு விழாக்கள் அக்டோபர் 30 அன்று நடைபெற உள்ளது. அந்த விழாவையொட்டி அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகருமான கருணாஸ் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
 “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று சீமான் பேசியதாக கேள்விபட்டேன். ஆனால், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே அது ஒரு துரதிஷ்டமாக நடந்தது என்றுதான் கூறியிருந்தார். தமிழர்களின் உயிர்களை காவு வாங்க காரணமாக இருந்த காரணத்துக்காகவே ராஜிவ் காந்தியை கொலை செய்தது நாங்கள்தான் என்று அதற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் பேசுவது ஆச்சரியமாக உள்ளது.


போர்க்களத்தில் உடன் நிற்காதவர்கள், அங்கு என்ன நடந்தது என்றே தெரியாதவர்கள், ஒரு போட்டோ எடுத்துக்கொண்ட ஒரே ஒரு  அடையாளத்தை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் முன்னின்று நடத்தியதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்க தமிழகத்தில் சிலர்  முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். இது நல்லதல்ல . ஒருவர் உயிர்நீத்த தியாகத்தை தன்னுடைய சுயநலத்துக்குப் பயன்படுத்துவது மிகவும் கேவலமானது கீழ்த்தரமானது. நாங்கள்தான் கொன்றோம் என்ற கருத்தை சீமான்  பகிர்வது நியாயம் இல்லை.” என்று கருணாஸ் பேசினார்.