Kanagaraj MLA speech

வறட்சியால் வாடும் விவசாயிகளுக்கு இந்த எம்எல்ஏ பதவியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று நினைக்கும் போது ராஜினாமா செய்து விடலாம் போல் தோன்றுகிறது என சூலூர் தொகுதி சசிகலா தரப்பு எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுக 2 ஆக பிரிந்தபோது சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் சூலூர் எம்எல்ஏ கனகராஜ். சூலூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்த போது, ஓபிஎஸ் அணிக்கு மாறிவிடுவேன் என மிரட்டல் விடுத்து புகழ் பெற்றார்.

பின்னர் சாமளாபுரத்தில் மதுக்கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் தானும் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக குரல் எழுப்பினார்.

இந்நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கனகராஜ் எம்எல்ஏ, செத்து மடிந்து கொண்டிருக்கும் இந்த விவசாயிகளை காப்பாற்ற தான் வகிக்கும் எம்எல்ஏ பதவியால் எதுவுமே செய்ய முடியவில்லையே என புலம்பினார்.

எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் இந்த பதவி தேவைதானா என கேள்வி எழுப்பிய கனகராஜ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிடலாமா என தோன்றுகிறது என தெரிவித்தார்.

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் கனகராஜ் எம்எல்ஏவின் இந்த பேச்சு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.