டி.டி.வி. தினகரன் தரப்பு அளித்த அழுத்தம் காரணமாகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாக, எம்.எல்.ஏ. ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கமளித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்புக்குப் பிறகு, ஓ.பி.எஸ்.-க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், கட்சியில் இருந்து சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

இதனால், கோபமடைந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் அண்மையில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஆதரவை திரும்ப பெற்றது ஏன் என விளக்கம் அளிக்க 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்த கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்தார்.

டி.டி.வி. தினகரன் தரப்பு அளித்த அழுத்தம் காரணமாகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாக  எம்.எல்.ஏ. ஜக்கையன், சபாநாயகர் தனபாலிடம் விளக்கமளித்துள்ளார்.