திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ, பிரதிநிதிகளை பாஜகவினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி அழைத்துச் சென்றதாக அக்கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

 

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து எம்.எல்.ஏக்கள், கவுல்சிலர்கள் நேற்று பாஜக-வுக்கு தாவினர். இதுகுறித்து திரிணாமூல் காங்கிரஸ் ஒரு அதிரடி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘எங்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு எம்.எல்.ஏ மற்றும் 6 கவுன்சிலர்கள் மட்டும்தான் பாஜக-வுக்குத் தாவியுள்ளனர். மற்றவர்கள் காங்கிரஸையும் சிபிஎம் கட்சியையும் சேர்ந்தவர்கள். துப்பாக்கி முனையில் பலர் கட்சித் தாவலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள்' எனக் கூறியுள்ளது. . 

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, ‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் சீக்கிரம் எங்கள் பக்கம் வருவார்கள்' என்று பகிரங்கமாக தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரங்ஷூ ராய் எம்.எல்.ஏ, நேற்று பாஜக-வில் இணைந்தார். அவர் பாஜக முகுல் ராயின் மகன். அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தேபேந்திர நாத் ராய் எம்.எல்.ஏ மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த துஷார்காந்தி பட்டாச்சார்யா எம்.எல்.ஏ ஆகியோர் நேற்று பாஜகவில் இணைந்தனர். 

இந்நிலையில், தங்களது கட்சியில் இருந்து 6 கவுன்சிலர்கள் மட்டுமே பாஜகவில் இணைந்துள்ளதாக திரிணாமூல் கூறினாலும், சுமார் 60 கவுன்சிலர்கள் நேற்று பாஜக-வில் இணைந்தனர். பாஜக தரப்பினரோ “எப்படி நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்ததோ, அதேபோல, 7 கட்டங்களில் பலர் பாஜக-வில் இணைவார்கள்” என்று சூசகமாக தெரிவித்துள்ளது.