முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன் அ.ம.மு.க., சார்பாகப் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து டி.டி.வி. தினகரன் பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னதாக தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் `தி.மு.க., கொண்டுவரப்போகிற நம்பிக்கை இல்லா தீர்மானத்தினால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. 3 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்வது தவறு என கருதி இருந்தால் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்னதாகவே அத்தகைய நடவடிக்கை கூடாது மு.க.ஸ்டாலின் அளித்திருக்க வேண்டும்.

 

மேலும் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சட்டப்படி கொண்டு வரமுடியாது. எனினும் திமுக அத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வருவோம் எனக் கூறுவது, 3 எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கையை இன்னும் துரிதப்படுத்துவதாகவே இருக்கிறது. இதிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், திமுகவுக்கும் தான் மறைமுக கூட்டணி இருப்பது அம்பலமாகியுள்ளது.

 
 
அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போது சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது நீதிமன்ற அவமதிப்புச் செயலாகவே கருதப்படுகிறது. தேர்தலுக்குப் பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக ராஜினாமா செய்துவிடுவார்.அ.தி.மு.க கொடியுடன் காவி நிற, தாமரை சேர்த்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும். தற்போது அ.தி.மு.க-விடம் தொண்டர்களுடைய பலமானது இல்லை, அவர்களிடம் பண பலம் நம்பி தான் தேர்தலை சந்திக்கின்றனர்'' என அவர் தெரிவித்தார்.