M.K.Stalin meets DMK District Administrators
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில், மாவட்ட நிர்வாகிகளுடன், திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்த நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
அதன் உள்ளாட்சி தேர்தலை 2017 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், அப்போது தேர்வுக்காலம் என்பதால் தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளதாக, அக்கட்சியின் பொது செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அடுத்த மாதம் துவங்கும் இந்த ஆய்வுக்கூட்டம், மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஊராட்சி செயலாளர்கள் முதல், மாவட்ட செயலாளர்கள் வரையுள்ள நிர்வாகிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில், கோவை மாநகர் வடக்கு, தெற்கு நீலகிரி திமுக நிர்வாகிகளை, ஸ்டாலின் சந்திக்கிறார்.
