கடந்த ஏப்ரல் மாதம் ஆர்கே நகர் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் திமுக, அதிமுகவின் இரு அணிகள் உள்பட பல்வேறு கட்சியினர் போட்டியிட்டனர். ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, சுமார் ரூ.5 கோடி வரை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
அதேபோல், குட்கா தடை செய்யப்பட்ட விவகாரத்தில், லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளது. இதையொட்டி, அவரை அமைச்சர் பதவி விலக வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நான் நிரபராதி என்பதை காலம் நிரூபிக்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர், அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது.
மக்கள் நல்வாழ்வு துறையின் நற்பணிகளையு, வேகத்தை தடுக்க பலர் முயன்று வருகிறார்கள். அது நடக்கவே நடக்காது. பல விமர்சனங்கள் தாண்டி நான் நிரபராதி என்பதை காலம் நிரூபிக்கும். என் மீது எந்த தவறும் இல்லை. எதையும் நான், சட்ட ரீதியாக சந்திப்பேன். காலம் எனது கணக்கை சரியாக கனித்து முடிக்கும்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டுகிறார். மு.க.ஸ்டாலினும், அவரது குடும்பமும் ஊழலின் ஊற்றுகள் என்பதை நாடே அறியும். பினாமி பெயரில் எங்கள் குடும்பம் எந்த தொழிலும் செய்யவில்லை.
ஆதாரம் இல்லாமல், திசை திருப்ப முயற்சிக்கும் மு.க.ஸ்டாலின் எண்ணம் நடக்காது. வயதில் மூத்தவராக உள்ள மு.க.ஸ்டாலினுக்கு நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.