முதலமைச்சரின் தாயார் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன், அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதலமைச்சர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார்  தவுசாயம்மாள் நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது (93) தவசாயி அம்மன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக சேலம் தனியார் (லண்டன் ஆர்த்தோ) மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்தார். முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை பெற்றுவந்த அவர் மாரடைப்பு காரணமாக  நள்ளிரவு 12:15 மணிக்கு உயிரிழந்தார். 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது, இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது தாயாரின் மறைவு செய்தி கேட்டு சாலை மார்க்கமாக சேலம் வந்தடைந்தார். அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயம்மாளுக்கு பழனிச்சாமியுடன், கோவிந்தராஜன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாயாரின் உடலுக்கு அமைச்சர் செங்கோட்டையன், கே.பி அன்பழகன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், கருப்பண்ணன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரிலும், அறிக்கையின் மூலமும் அஞ்சலி செலுத்தி தங்களது இரங்களை பதிவு செய்து வருகின்றனர்.  இந்நிலையில் முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: முதலமைச்சரின் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு மன வேதனைக்கு உள்ளானேன், அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதலமைச்சர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம், எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.