ஐபேக் நிறுவனம் தி.மு.க.வுடன் ஒப்பந்தம் போட்ட காலத்திலிருந்தே தி.மு.க.வின் ஐ.டி.விங், கட்சியின் சீனியர்கள் என பலருடனும் மனவருத்தம் தொடர்ந்தே வருகிறது. தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும் ஐபேக் நிர்வாகிகள் மீது கோபத்தைக் காட்டிவருகின்றனர்.

இதனால் ஐபேக் நிரிவாகிகள் எந்த ஒரு காரியத்துக்கும் தி.மு.க நிர்வாகிகளை குற்றம் சாட்டுவதும், பதிலுக்கு அவர்கள் கடுகடுப்பதும் அதிகரித்து வருகிறது.
ஐபேக் நிறுவனம் உள்ளே நுழைந்ததும் சில சர்வே எடுத்துக்கொடுத்தது தவிர வேறு எந்த காரியமும் உருப்படியாக செய்யவில்லை.. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஸ்டாலின், ’’உங்களை ஒப்பந்தம் செய்து மாதக் கணக்கில் ஆகிவிட்டது. இன்னும் உருப்படியாக எதையும் செய்யவில்லையே!’’ என அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

உடனே ஐபேக் டீம், ‘’பல ஆண்டுகளாக ஒரே பதவியில் சொகுசாக உங்கள் கட்சியில் பலரும் இருந்து வருவதால் அந்த நிர்வாகிகளால் ஒழுங்காக வேலை பார்க்க முடியவில்லை. ஒரு சின்ன டீடெயில் கேட்டால் கூட நாள் கணக்கில் இழுத்தடிக்கிறார்கள். துடிப்பான எங்கள் ஐபேக் பணியாட்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால் பழியை எங்கள் மீது தூக்கி போடுகிறார்கள். அவங்களை சரிப்படுத்திக் கொள்ள உத்தரவிடுங்கள். இல்லாவிட்டால் பின்னாடி எங்களை குறை சொல்லக் கூடாது’’என்று பதில் சொல்லி இருக்கிறார்கள்.

அதேபோன்று கட்சி நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஸ்டாலின் கேட்டால், ‘’ஐபேக் நிறுவனம் கொடுக்கும் வேலைகளை செய்யவே எங்களுக்கு நேரம் போதவில்லை என கட்சியினர் சொல்வதால் வெறுத்துப்போய் விட்டார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுக்கும் ஐ - பேக்  நிறுவன ஊழியர்கள், 'டேட்டா கலெக்ஷன்' என்கிற பெயரில் செய்யும் அலப்பரையால், மாவட்டச் செயலர்கள் பலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறுகிறார்கள். 

திமுக மாவட்டச் செயலாளர்களை நேரம் காலமின்றி, போனில் அழைக்கும் 'ஐ பேக்' ஊழியர்கள் வயது வித்தியசமின்றி கட்சி நிர்வாகிகளிடம் பேசுகிறார்களாம். இது, மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக புகார் வர, கட்சியினருக்கு மரியாதை கொடுங்கள் என  'ஐ - பேக்'  ஊழியர்களுக்கு அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் உத்தரவு போட்டு இருக்கிறார் என்கிறார்கள்.